ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க தபால் துறைக்கு உத்தரவு| Dinamalar

கடலுார்: சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியருக்கு 1 லட்சத்து ஆயிரத்து 700 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென, தபால் துறைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

கடலுார் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர் காமராஜ். இவர், நெய்வேலி தபால் நிலையத்தில் கடந்த 2009ம் ஆண்டு அஞ்சலக காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தினார். பாலிசி தொகை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது.பாலிசி பத்திரம் தொலைந்து போனதால் நகல் வழங்குமாறு தபால் அலுவலகத்தை அணுகினார். நகல் கிடைத்ததில் என்.எல்.சி., நிறுவனத்தில் வேலை செய்யும் மற்றொரு ஊழியரான பாலசுப்ரமணியன் பெயரில் பாலிசி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பாதிக்கப்பட்ட காமராஜ் அவர், மாதந்தோறும் 1,150 ரூபாய் வீதம் 6 ஆண்டுகளுக்கு பிடிக்கப்பட்ட பாலிசி தொகை 66 ஆயிரத்து 700 ரூபாயை திருப்பிக் கேட்டதற்கு தபால் துறை தர மறுத்து விட்டது. இழப்பீடு கோரி கடந்த 2015ம் ஆண்டு அவர் கடலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.இதில், சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட காமராஜிற்கு 1 லட்சத்து ஆயிரத்து 700 ரூபாயை சென்னை தலைமை தபால் நிலையமும், கடலுார் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் சேர்ந்து இழப்பீடாக வழங்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.