கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன சோதனையின்போது தேங்காய் வியாபாரியிடம் பறித்த ரூ.46,300ஐ தனது உறவினர் ஒருவர் மூலம் திருப்பி கொடுத்துள்ளார் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன்.
தனக்கு எதிராக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவை வாபஸ் வாங்குமாறு தேங்காய் வியாபாரியை தனது நெருங்கிய உறவினர் மூலம் சிறப்பு எஸ்ஐ பாண்டியன் நிர்பந்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டையை அடுத்துள்ள ஆவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் (53) என்ற தேங்காய் வியாபாரி கடந்த வியாழக்கிழமை (ஜுன் 25) இரவு ஜீவானந்தம் என்ற உதவியாளருடன் தனது மினி லாரியில் திருச்சி மார்க்கெட்டுக்கு தேங்காய் லோடு ஏற்றிச் சென்று விற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தை அவரே ஓட்டி வந்துள்ளார்.
மறுநாள் (26-ம் தேதி) அதிகாலை 3 மணியளவில் வல்லம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வல்லம் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மேற்படி வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்திவிட்டு, கணேசன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.46,300ஐ எடுக்கச் சொல்லி அதை பிடுங்கிக் கொண்டு, அவரை அங்கிருந்த கோழி லோடு ஏற்றிய வேன் ஒன்றில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று ஒரு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார்.தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு ‘உன் மீது கேஸ் போட்டுருவேன். உனது வண்டியை பறிமுதல் செய்து விடுவேன்’ என சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மிரட்டியதாகவும் தேங்காய் வியாபாரி கணேசன் குற்றஞ்சாட்டினார்.
பணத்தை பறிகொடுத்த தேங்காய் வியாபாரி கணேசன் அன்றைய தினமே வல்லம் டிஎஸ்பி பிருந்தாவை நேரில் சந்தித்து, சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தை பெற்றுத் தருமாறு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு எஸ்ஐ பாண்டியன் மறுத்தார். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி கணேசன் சுமார் 70 கி.மீ. தாண்டி வல்லத்தில் உள்ள சிறப்பு எஸ்ஐ பாண்டியன் பணம் பறித்துக் கொண்டதாக வேண்டுமென்றே பொய் புகார் கொடுப்பதற்கான ‘மோட்டிவ்’ எதுவும் இல்லை என்பதை அவரது தரப்பினர் வல்லம் டி.எஸ்.பி.யிடம் தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான சிறப்பு எஸ்.ஐ. பாண்டியன் தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் 27-ம் தேதி காலை 6 மணியளவில் பணத்தை முழுவதுமாக திருப்பி கொடுத்துள்ளார்.
“மறுநாள் காலை 6 மணியளவில் திருவாரூர் மாவட்டம் திருமாக்கோட்டையைச் சேர்ந்த அவரது பங்காளி மகன் ராஜா பணத்தை கொண்டு வந்து வீட்டில் கொடுத்து விட்டார்,” என்கிறார் தேங்காய் வியாபாரி கணேசன்.
“முழு பணத்தையும் திருப்பி கொடுத்திட்டாங்க. அதோட பாண்டியன் இன்னும் 6 மாதத்தில் ஓய்வு பெற இருப்பதாகவும் அதனால் அவரது எதிர்காலம் பாதிக்கக் கூடாது என்பதற்காக அவர் மீதான எனது புகாரை வாபஸ் வாங்குமாறும் தனது உறவினர் மூலம் எனக்கு தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்து வருகிறார்.
நேற்று கூட அவரது உறவினர் 2 முறை ஃபோன் போட்டு புகாரை வாபஸ் பெறுமாறு என்னிடம் கூறினார். ஆனால் இதுகுறித்து நான் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை,” என்கிறார் கணேசன்.
பணத்தை திருப்பி கொடுத்ததன் மூலம் அவர் தன் மீதான குற்றச்சாட்டை, தனது குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ளார் என்பதாக தானே அர்த்தம்.
இதற்கிடையே சிறப்பு எஸ்ஐ பாண்டியன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது இதுவரை முறையாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அவரது இச்செயல் வெளியே தெரிந்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவமானம் ஏற்படும் என்பதால் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளில் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
செய்தி: எஸ்.இர்ஷாத் அஹமது