நாட்டில் அனைத்து தபால் அலுவலகங்களும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மாத்திரம் அரச அலுவலகங்களை திறப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
தற்போது நிலவும் காகித தட்டுப்பாடு காரணமாக தபால் சேவைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கிடைக்கும் கடிதங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. தபால் சேவைக்கான முத்திரைகள் மற்றும் கடித உறைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளக கடித சேவைக்காக கடதாசி பயன்படுத்துவதற்கு பதிலாக மின் அஞ்சலை பயன்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் தபால் மா அதிபர் குறிப்பிட்டார்.
இதேவேளை சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள், சர்வதேச தபால் மூலம் பல்வேறு பொருட்கள் கிடைப்பதன் காரணமாகவும்m தபால் பொருட்களை விநியோகிக்க நேர்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.