நடிகர் வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவரான வெங்கல்ராவ், கல்லீரல் கோளாரால் பாதிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் இருக்கிறார்.
வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், ஃபைட்டராக இருந்து காமெடிக்கு மாறியவர். ‘பணக்காரன்’, ‘ராஜாதி ராஜா’ கால ரஜினி, அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டவர் வெங்கல் ராவ். விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர் அவர். சினிமாவில் ஃபைட்டராகத் தன் கரியரைத் தொடங்கிய வெங்கல் ராவ் சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர்.
வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் அவரது டீமில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர். அதில் வெங்கல் ராவும் ஒருவர்.
இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்கக் களம் இறங்கிய பிறகு பழைய ஆட்களையும் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறார். இப்போது சுராஜ் இயக்கி வரும் ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் வெங்கலுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.
வெங்கல் ராவின் உடல்நிலை குறித்து விஜய்வாடாவில் வசித்து வரும் அவரது மகள் லட்சுமியிடம் பேசினேன்.
”படப்பிடிப்பு இல்லாத நாட்கள்ல அப்பா சொந்த ஊருக்கு வந்திடுவார். இப்ப வடிவேலு சாரோட ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ உள்பட சில படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கார். வயிறு வலியால அப்பா அவதிப்பட்டதால, இங்கே ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினோம். கல்லீரல் கோளாறால் இப்ப ஐசியூவில் சிகிச்சையில் இருக்கார். ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த பிறகு வீடு திரும்பலாம்னு சொல்லியிருக்காங்க.” என்கிறார் அவர். வெங்கல்ராவின் மனைவி சின்ன கொண்டம்மா கணவருடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். இவரின் ஒரே மகள் லட்சுமி தான் இப்போது அப்பாவை கவனித்து வருகிறார்.