திருச்சி: திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் வேண்டிய வாகனங்கள், இடதுபுறத்திலுள்ள சர்வீஸ் சாலையில் தஞ்சாவூர் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று ஜி கார்னர் சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இணைய வேண்டியுள்ளது.
இந்த இரு சாலைகளும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ளவை என்பதால், விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் முன்னெச்சரிக்கையாக சர்வீஸ் சாலை முடியும்இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் திருச்சி வரக்கூடிய விவிஐபிக்கள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கும், சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக பிற மாவட்டங்களுக்கும் இந்த வழித்தடத்தில்தான் சென்றுவர வேண்டும் என்பதால், சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் தீரன்நகர் கிளையிலிருந்து மன்னார்புரம் ரவுண்டானா வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறையூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது, டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து சர்வீஸ் சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு லாரி மோதியது. இந்த விபத்தில் அரசுப் பேருந்துகவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார். பயணிகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும், இருசாலைகளும் சந்திக்கக்கூடிய இந்த இடத்தில் வாகனங்கள் மோதிக்கொண்டு அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு வாகனங்களின் அதிவேகமும், பக்கவாட்டிலுள்ள சாலைகளை கவனிக்காமல் வருவதும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இதைத் தவிர்க்க டிவிஎஸ் டோல்கேட் சர்வீஸ் சாலையில், அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க காவல்துறை முன்வர வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் தேவியிடம் கேட்டபோது, ‘‘பொன்மலை ஜி கார்னர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த பகுதியில், விபத்து ஏற்பட என்ன காரணம் எனவும், சரி செய்வதற்கான வழிகள் குறித்தும்கண்டறிந்து அறிக்கை அளிக்குமாறு போக்குவரத்து பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை ஆகிய இரண்டும் சந்திக்கக்கூடிய பகுதி என்பதால், அங்கு வேகத்தடை அமைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.