வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி ரூ.25 லட்சம் பணத்தை மனைவி மோசடி செய்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்தவர் நுர்ஜமால் ஷேக். இவர் மனைவி ஷஹினா கதும். கடந்த 5 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் நுர்ஜமால் ஷேக் பணியாற்றி வருகிறார்.
கணவன் வெளிநாடு சென்ற பிறகு அவருடன் பேசுவதை படிப்படியாக குறைத்த மனைவி ஷஹினா ஒரு கட்டத்தில் கணவருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொண்டார்.
மேலும், கணவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை தெரிந்துகொண்ட அவர் நுர்ஜமால் பெயரில் உள்ள ஆயுள் காப்பீட்டு பணம் மற்றும் வங்கி சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்க திட்டம் தீட்டினார்.
இதற்காக உயிருடன் இருக்கும் கணவன் மரணித்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் தயாரித்துள்ளார். இதை வைத்து வங்கியில் உள்ள பணம் மற்றும் ஆயுள் காப்பீட்டு பணம் என ரூ.25 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.
இதனிடையே 5 ஆண்டுகள் கழித்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்த நுர்ஜமால் வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக போலி சான்றிதழ் அளித்து மனைவி பணத்தை எடுத்துக்கொண்ட சம்பவத்தை மேலாளர் கூறியதை அறிந்து நுர்ஜமால் ஷேக் அதிர்ச்சிக்குள்ளானார்.
உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று மனைவி மீது நுர்ஜமால் புகார் அளித்தார். அதில், தனது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு தலைமறைவான அவரை கண்டுபிடித்து நீதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிசார் கதுமை வலைவீசி தேடி வருகின்றனர்.