அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்து உள்ளது.
அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மக்களை பாதிக்கும் வகையிலான இந்த வரி உயர்வு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கக் கூடாது என்று, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சற்றுமுன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“அஞ்சலக சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் தயிர், கோதுமை மாவு ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதல்ல.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விதமான புதிய வரி விதிப்பையோ, ஏற்கனவே அளிக்கப்பட்ட வரிவிலக்கை ரத்து செய்வதையோ மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.