வேலூர்: வேலூரில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.360 கோடி மதிப்பில் 30,423 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கவுள்ளார். மேலும், ரூ.94 கோடியில் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கஉள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார். மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை திறந்து வைக்கஉள்ளார். இதற்காக, முதல்வர் நேற்று மாலை ஆம்பூர் வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெறஉள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு அரசு துறைகள் சார்பில் மொத்தம் ரூ.360 கோடி மதிப்பீட்டில் 30 ஆயிரத்து 423 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். முதல்வர் பங்கேற்கும் விழா அரங்கின் பாதுகாப்பை போலீஸார் முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ரூ.50.31 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு விழாவுடன் குடியாத்தம் திருமகள் அரசினர் கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.62 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து, அரசின் புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகள் என ரூ.32.89கோடியில் மொத்தம் 50 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.455 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதுடன் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.