திடீரென வீட்டிலோ, வெளியிலோ யாரேனும் மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி என்ன என்று தெரிந்துகொள்வது அவசியம்.
யாருக்கேனும் உடலில் மின்சாரம் தாக்கினால் அருகில் இருப்பவர்கள், உடனடியாக அவர் தாக்கப்பட்ட இடத்தில் உடனே மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவருக்கும் மின்சார இணைப்புக்கும் தொடர்பு இல்லாததை உறுதிசெய்த பின்னரே, அருகில் சென்று உதவ வேண்டும்.
மின்சாரத்தால் தாக்கப்பட்டவர் சுய நினைவுடன் இருக்கிறாரா, இல்லையா எனப் பார்த்து, உதவிக்கு இன்னும் சிலரையோ, அவசர முதலுதவி எண்ணையோ அழைக்க வேண்டும்.
சுய நினைவுடன் இருந்தால் அவருக்கு ஏதேனும் காயமோ, கீழே விழுந்ததால் ஏதேனும் எலும்பு முறிவோ ஏற்பட்டுள்ளதா என ஆராய வேண்டும். மின்சார விபத்தில் எலும்பு முறிவு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
சுயநினைவு இல்லையெனில் சுவாசத்துக்கு ஏதேனும் தடங்கல் உள்ளதா என ஆராய்ந்து, வாயில் உமிழ்நீர் சுவாசத்துக்கு தடையாக இருந்தால் அந்த நபரின் உடலை ஒரு பக்கமாகச் சாய்க்க வேண்டும்.
ஒருவேளை மூச்சற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் CPR எனப்படும் இதய இயக்க மீட்பு உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சையை அளிக்கலாம்.
சுய நினைவு இழந்தவர்களை அதிவிரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க வேண்டும்.
மின்சாரம் இதயத்தில் உள்ள மின்னணு ஓட்டத்தை சீர்குலைப்பதால், மின் அதிர்ச்சிக்குப் பின் சுய நினைவுடன் நன்றாக இருக்கும் நபருக்கும் `அரித்மியா (Arrhythmia)’ எனும் சீரற்ற இருதய துடிப்போ, மாரடைப்போ தொடரும் நிமிடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சுய நினைவுடன் இருந்தாலும் மருத்துவமனைக்குச் சென்று இ.சி.ஜி, ரத்த ஆய்வு போன்ற அடிப்படை பரிசோதனைகளைச் செய்து சிறிது நேரம் மருத்துவக் கண்காணிப்புக்குப் பின்னரே, வீடு திரும்ப வேண்டும்.
மின் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு, மறதி, காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னை, எலும்பு முறிவு, தசை பாதிப்பு, கண்ணில் புரை விழுதல் என, தாக்கிய மின்சாரத்தின் அளவுக்கேற்ப பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
மருத்துவ உதவி எவ்வளவு சீக்கிரமாக அவருக்குக் கிடைக்கிறதோ அந்தளவுக்கு அவருக்கு பாதிப்புகள் குறைவாக ஏற்படும்.