ஹோட்டல் அறைக்கு வரி விலக்கு ரத்தாகிறது?| Dinamalar

சண்டிகர்: ஹோட்டல்களில், 1,000 ரூபாய்க்கு குறைவான அறை வாடகைக்கு அளிக்கும் வரி விலக்கை ரத்து செய்யக் கோரி, பல மாநிலங்கள் அளித்த பரிந்துரையை ஏற்பதாக ஜி.எஸ்.டி., கவுன்சில் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், ஹரியானா மாநிலம், சண்டிகரில் நேற்று துவங்கியது. இக்கூட்டத்தில், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களின் நிதியமைச்சர்கள், ஜி.எஸ்.டி., அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஜி.எஸ்.டி.,யில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அவற்றில் ஒன்றாக, ஹோட்டல்களில், தினம், 1,000 ரூபாய்க்கு குறைவான அறை வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் வரி விலக்கு சலுகையை ரத்து செய்து, 12 சதவீதம் வரி விதிக்கும் யோசனையை ஏற்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அதுபோல அட்டையில் அடைத்து விற்கப்படும் தயிர், லஸ்ஸி, கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு, 5 சதவீதம் வரி விதிக்கும் பரிந்துரையையும் கவுன்சில் ஏற்றது.

இது தவிர சில சேவைகளுக்கான வரி விலக்கை ரத்து செய்யவும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.கொரோனா காரணமாக இக்கூட்டத்தில் பங்கேற்காத சத்தீஸ்கர் நிதியமைச்சர் டி.எஸ்.சிங் டியோ, கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ஜி.எஸ்.டி.,யால், சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறையைச் சேர்ந்த சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களின் வரி வருவாய் சரிவடைந்துள்ளது.

அதனால், மாநிலங்களுக்கு வழங்கும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டை, வரும் ஜூலை முதல் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அல்லது தற்போது வரி வருவாய் பகிர்வு விகிதத்தை மாற்ற வேண்டும். தற்போது, ஜி.எஸ்.டி., வருவாயில் சரிபாதியை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. இனி, மாநிலங்களுக்கு, 70 – 80 சதவீத வருவாயை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.