“10 ரூவா சம்பளத்துக்கு ஆசைப்பட்டு என் வாழ்க்கையே திசைமாறிடுச்சு!" – நடிகை லீலாவதியின் பர்சனல்ஸ்

சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. அதுபோல கன்னட சினிமாவில் நடிப்புக்கும் பரபரப்புக்கும் பெயர் போனவர் லீலாவதி. வீட்டு வேலை செய்து கொண்டிருந்தவர், சினிமாவில் நாயகியாகப் புகழ் பெற்றது முதல், மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருடனான திருமண பந்தம் வரை லீலாவதியின் வாழ்க்கையில் அரங்கேறிய அதிரடி நிகழ்வுகள் ஏராளம்.

விவசாய வேலையில் நடிகை லீலாவதி…

கன்னட சினிமாவில் சீனியர் நடிகையான இவர், `அவள் ஒரு தொடர்கதை’, `அவர்கள்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வாழ்க்கையின் சுழலில் சிக்கி மீண்டெழுந்த அவரை, சினிமாவும் விவசாயமும்தான் காப்பாற்றியிருக்கின்றன. வயது முதிர்ச்சியால் சினிமாவில் இருந்து விலகினாலும், கழனியில் இறங்கினால் மட்டும் லீலாவதிக்கு இளமை திரும்புகிறது.

பெங்களூருவை அடுத்த சொலதேவனஹல்லி மலைப்பகுதியில் இருக்கிறது லீலாவதியின் பண்ணை வீடு. பழத்தோட்டம், நெற்பயிர் மற்றும் காய்கறிகள் சாகுபடியுடன், பத்துக்கும் மேற்பட்ட நாய்களையும் உறவாக வளர்த்து வருகிறார். தன் ஒரே மகனுடன் அமைதியாக வாழ்ந்துவரும் லீலாவதியின் வாழ்க்கைப் பயணத்தை அறியும் ஆவலில், அவரைத் தொடர்புகொண்டோம். கன்னடம் கலப்பின்றி, தமிழில் சரளமாகப் பேசியவர், தன் பால்ய பிராயத்தில் இருந்து ஆரம்பித்தார்.

விவசாய வேலையில்
நடிகை லீலாவதி…

“மங்களூருவுக்குப் பக்கத்துல ஒரு குக்கிராமம்தான் என் பூர்வீகம். விவசாயக் குடும்பம். நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, குடும்ப வறுமையால என் வாழ்க்கை யூகிக்கவே முடியாத வகையில திசைமாறிடுச்சு. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, மொத்தக் குடும்பமும் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லைனு, என் பெற்றோர் என்னை வீட்டு வேலைக்கு அனுப்பியிருக்க மாட்டாங்க. விதியின் விளையாட்டுக்கு நான் மட்டும் தப்ப முடியுமா என்ன? சினிமாங்கிற ஆசையை என் மனசுல விதைச்சு, வாழ்க்கைப் பாடத்தை விதி எனக்குக் கத்துக் கொடுத்திடுச்சு.

வீட்டு வேலையில, மாதமானா எனக்கு அஞ்சு ரூவா சம்பளம் கொடுத்தாங்க. அப்புறமா, மேடை நாடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சப்போ, பத்து ரூவாயா என் சம்பளம் அதிகமாச்சு. அதுக்கே நிறைய போட்டிகளையும் பொறாமைகளையும் எதிர்கொண்டேன். நாடகத்துல நடிக்கிறது, புரொடக்ஷன் வேலைனு நாள் முழுக்க ரொம்பவே சிரமப்படணும். அப்போ நான் சின்ன பொண்ணுங்கிறதால, சிரமம் பார்க்காம துறுதுறுனு வேலை செஞ்சேன். வசனங்களை நல்லா மனப்பாடம் செஞ்சு தடுமாற்றமில்லாம பேசி நடிச்சதால, நாடகங்கள்ல ஹீரோயின் வேஷமும் எனக்குக் கிடைச்சது.

‘அவர்கள்’ படத்தில் லீலாவதி…

`சினிமாவுல உனக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைச்சிருக்கு’னு ஒரு முறை சிலர் சொன்னதை நம்பி, மனசுல ஆசைகளை வளர்த்துகிட்டேன். ஷூட்டிங்குக் கூட்டிட்டுப்போக என் வீட்டுக்கு கார் வரும்னு நாள் முழுக்கக் காத்திருந்து, ஏமாற்றமே மிஞ்சியது. அதனால, தலையணை நனையுற அளவுக்கு அழுது புலம்பியதை இப்பவரைக்கும் என்னால மறக்கவே முடியலை.

ஆனா, அடுத்த கொஞ்ச காலத்துலயே சினிமா வாய்ப்புகள் தேடி வந்துச்சு. லீலா கிரண்ங்கிற என் பெயரை, சினிமாக்காரங்க லீலாவதினு மாத்தினாங்க. நடிகையா புகழ்பெறணும், வறுமையிலேருந்து மீளணும்ங்கிற ஆசையில சினிமாவுக்காக பலவிதங்கள்லயும் என்னை மாத்திக்கிட்டேன்” என்றவரின் குணச்சித்திர நடிப்பு, இவரை தமிழ் சினிமாவிலும் பிரபலப்படுத்தியது.

“ஹீரோயினா நிறைய படங்கள்ல நடிச்ச நிலையில, 1970-களின் தொடக்கத்துல எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சது. கன்னட சினிமாவுல பெரிய டைரக்டரான புட்டண்ணா கனகல் சார், `கெஜ்ஜே பூஜே’ங்கிற அவரோட படத்துல ஹீரோயினுக்கு அம்மா வேஷத்துல நடிக்கக் கேட்டார். மறுத்த என்னை வலியுறுத்தி அந்தப் படத்துல நடிக்க வெச்சதுடன், இதுக்கப்புறமாதான் உங்களுக்குப் புகழ் இன்னும் அதிகமா கிடைக்கும்னு சொன்னார். அவர் சொன்னதுபோல, கேரக்டர் ரோல்கள் எனக்கு அதிகமா வந்துச்சு. விஷ்ணுவர்தன், அம்பரீஷ், அனந்த் நாக், ரவிச்சந்திரன்னு அப்போ பிரபலமா இருந்த பெரும்பாலான ஹீரோக்களுக்கும் அம்மாவா நடிச்சேன். கன்னட சினிமா உலகம் சின்னது. அதனால, என் படங்கள் வெள்ளி விழாக்கள் கொண்டாடினாலும்கூட, எனக்கான சம்பளம் பெரிசா உயரலை. 1970-களுக்குப் பிறகுதான், மொத்தமா 10,000 ரூபாயை சம்பளமா வாங்கினேன்.

விவசாய வேலையில்
நடிகை லீலாவதி…

அந்த நேரத்துலதான் `அவள் ஒரு தொடர்கதை’ படத்துல நடிச்சேன். டைரக்டர் கே.பாலசந்தர் சார், என்மேல அளவுகடந்த நம்பிக்கை வெச்சிருந்தார். அதைக் காப்பாத்தணும்னு தினமும் விடியற்காலையிலேயே ரெடியாகி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகிற வரைக்கும் டயலாக்கை மனப்பாடம் பண்ணுவேன். பிறகு, `அவர்கள்’ படத்துல சுஜாதாவுக்கு மாமியாராவும், அந்தப் படத்தோட தெலுங்கு ரீமேக்ல ஜெயசுதாவுக்கு மாமியாராவும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர் சார். அவர் மட்டும் சரியான நேரத்துல அந்த வாய்ப்புகளை எனக்குக் கொடுக்காம இருந்திருந்தா, தமிழ் சினிமாவுல என்னை யாருக்கும் தெரியாமலேயே போயிருந்திருக்கும்” – லீலாவதியின் பேச்சில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடுகின்றன.

லீலாவதியின் மகன் வினோத் ராஜ், கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்தவர். சென்னையிலுள்ள `மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி’யில் படித்தபோது இவரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் வகுப்புத் தோழர்கள். தன் மகனுடன் இணைந்து விவசாய வேலைகளைச் செய்து வரும் லீலாவதி, அதுகுறித்த சேதிகளையும் உற்சாகமாகப் பகிர்ந்தார்.

விவசாய வேலையில்
நடிகை லீலாவதி…

“சினிமாவும் விவசாய வேலையும்தான் என்னை இப்ப வரைக்கும் இயக்குது. இதைத் தவிர, வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. அதனாலதான், சினிமா போதும்னு முடிவெடுத்ததும் விவசாயத்துடன்கூடிய அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன். அதுக்கேத்த மாதிரியே நாங்க வசிக்கிற இந்த இடம் கிடைச்சது. தரிசா கிடந்த இந்த நிலத்தை இப்போ செழிப்பான தோட்டமா மாத்தியிருக்கோம். முன்னாள் பிரதமர் தேவ கெளடா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா, சித்தராமையானு கர்நாடக முன்னாள் முதல்வர்கள் பலரும் என் விவசாய வேலைகளைப் பாராட்டியிருக்காங்க” என்பவர், சொலதேவனஹல்லி மலைப்பகுதியில் அதிக அளவில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நலனுக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவமனையைக் கட்டியிருக்கிறார்.

விரைவிலேயே பயன்பாட்டுக்கு வரவிருக்கும் அந்தப் பணிகள் குறித்துப் பேசியவர், “இது வனத்தையொட்டிய மலைப்பகுதி. இங்கிருக்கிற பழங்குடி மக்களுக்கு முன்பு மருத்துவ வசதிகள் குறைவாதான் கிடைச்சது. இதனால, பத்து வருஷத்துக்கு முன்பு ஆறு படுக்கைகளுடன் சின்னதா ஆஸ்பத்திரி கட்டி அரசாங்கத்து கிட்ட ஒப்படைச்சேன். மக்கள் தொகை கூடிட்டதால, மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுச்சு.

நடிகை லீலாவதி

ஒருத்தர் நிலம் தானமா கொடுத்தார். அதுல, ஆறு பிரசவ பெட் உட்பட மொத்தம் 26 படுக்கைகளுடன் இப்போ புது ஆஸ்பத்திரியைக் கட்டியிருக்கோம். டாக்டர்கள் உட்பட போதுமான ஊழியர்களை நியமிச்சு கர்நாடக அரசாங்கம் இந்த ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும். நானும் என் பையனும் எங்க தேவைக்கு மீறி என்னத்த கொண்டுபோகப் போறோம்? ஒண்ணுமில்லாம இருந்த நான், மக்களோட அன்பாலதான் நல்ல நிலைக்கு உயர்ந்தேன். அதனால, என் தேவைக்கு மீறின செல்வத்தை மக்களுக்கே கொடுக்கிறதுதான் சரியா இருக்கும். அதைத்தான் செஞ்சிருக்கேன்” மிகையில்லாத பேச்சால் நம் மனதில் குடிகொள்கிறார் லீலாவதி.

அவள் விகடனில் வெளியான நடிகை லீலாவதியின் விரிவான பேட்டியைப் படிக்க, இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.