அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் எடப்பாடி கே பழனிசாமிக்கு 2400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர். மேலும் அதிமுகவின் முக்கிய புள்ளிகளும், மூத்த தலைவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் இரண்டு மூன்று முக்கிய புள்ளிகள் மட்டுமே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வைத்தியலிங்கத்திற்கு இன்று கொரோனா நோய்தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை என்று வைத்தியலிங்கம் மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக செய்தி வெளியான 10 நிமிடத்தில், வைத்திலிங்கம் தனக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால், எடப்பாடி பழனிசாமி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 3 நிர்வாகிகளுக்கு நோய் தொற்று உறுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.