அதிமுக அலுவலகம் செல்ல சசிகலா திட்டமா? – அழைப்பு விடுத்து ஒட்டப்பட்ட போஸ்டரால் சலசலப்பு

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் மாறி மாறி மனு அளித்து வருகின்றனர்.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த 26-ம் தேதி அரசியல் சுற்றுப்பயணத்தை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கினார். ஆர்.கே.பேட்டையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது, ‘அதிமுகவை காக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. என் தலைமையில் அதிமுகஇருக்க வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர்’ என தெரிவித்தார். அடுத்தகட்டமாக வரும் 3-ம் தேதி குமணன்சாவடியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா, திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம், தாமரைப்பாக்கம் பகுதிகளில் ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். 5-ம் தேதி திண்டிவனம், 6-ம் தேதிவானூர், 7-ம் தேதி உளுந்தூர்பேட்டை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ராயப்பேட்டை மற்றும்அதிமுக தலைமை அலுவலகத்தை சுற்றிலும் ஒட்டப்பட்டுள்ள இந்தபோஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா ஒருவேளை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லதிட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியும் கட்சியினரிடம் எழுந்துள்ளது. இதையடுத்து, பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.