ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக டெய்லர் கன்ஹையா லால் என்பவர் கடந்த செவ்வாயன்று இரண்டு பேரால் தலைதுண்டித்துக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலையாளிகளை அன்றிரவே போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியடுத்து. ராஜஸ்தானில் கலவரம் ஏதும் ஏற்படாமல் காக்கும் வண்ணம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை மத்திய அரசின் உத்தரவின்படி என்.ஐ.ஏ மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் உதய்பூர் சம்பவம் குறித்து ஐ.நா, `அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதை உறுதிசெய்ய வேண்டும்’ எனக் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்-ன் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது பத்திரிகையாளர்கள், `இந்தியாவில் ஏற்பட்டுள்ள மத பதட்டங்கள் குறித்து ஐ.நா.வின் தலைவருக்குக் கருத்து உள்ளதா?’ எனக் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த டுஜாரிக், “அனைத்து மதங்களின் முழு மரியாதைக்காக, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்” என்று கூறினார்.