மகாராஷ்டிராவில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டது. சிவசேனாவின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராகச் செயல்படுவார் என்றும், அவருக்கு பா.ஜ.க முழு ஆதரவு தரும் என்றும் பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
பிப்ரவரி 9, 1964-ல் மகாராஷ்டிராவிலுள்ள சத்தாரா பகுதியில் பிறந்தவர் ஏக்நாத் ஷிண்டே. 11-ம் வகுப்பு வரை படித்த ஷிண்டே, குடும்ப சூழ்நிலை காரணமாகப் படிப்பை நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். பின்னர், மும்பையை ஒட்டியுள்ள தானே நகருக்குச் சென்று அங்கே ஆட்டோ டிரைவராக பணி செய்தார்.
1980-களில் பால் தாக்கரேவின் கொள்கைகள்மீது ஈடுபாடு ஏற்பட, சிவசேனாவில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போதிலிருந்து சிவசேனா சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு, சிறை சென்றிருக்கிறார் ஷிண்டே. தானே பகுதியில் சிவசேனாவின் கொள்கைகளைப் பரப்பி கட்சித் தலைமையின் கவனத்தைப் பெற்றார். தானே மக்களிடமும் செல்வாக்குப் பெறத் தொடங்கினார்.
1997-ல் நடந்த தானே உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்வானார். 2004-ம் ஆண்டு, தானே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வானார் ஷிண்டே. அடுத்த ஆண்டே சிவசேனாவின் தானே மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்றார். 2009, 2014, 2019 என அடுத்தடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றார். 2014-ம் ஆண்டு, சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் பா.ஜ.க-வுடன் கூட்டணி ஆட்சி செய்ய சிவசேனா ஒப்புக்கொண்டதால், பொதுப் பணித்துறை அமைச்சரானார் ஷிண்டே.
2019-ம் ஆண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான `மகா விகாஸ் அகாதி’ கூட்டணியின் ஆட்சி அமைந்தபோது, மீண்டும் பொதுப் பணித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து, கட்சிக்குள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவின் கைகள் ஓங்க, தான் ஓரங்கட்டப்படுவதாக நினைத்திருக்கிறார் ஷிண்டே. கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலப் பிரச்னைகள் காரணமாகக் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார் உத்தவ் தாக்கரே. அந்த இடைவெளியைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாகக் கட்சி நிர்வாகிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் சந்தித்து கட்சிக்குள் தனக்கான ஆதரவைப் பெருக்கிக் கொண்டார். இந்த நிலையில்தான் கட்சியை உடைத்து, கிட்டத்தட்ட முக்கால்வாசி எம்.எல்.ஏ-க்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார் ஷிண்டே. அவர்களோடு அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்று தஞ்சமடைந்தவர், பா.ஜ.க-வோடும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்தார்.
கடந்த சில தினங்களாக மகாராஷ்டிர அரசியலில் நடந்துவந்த குழப்பங்களை அடுத்து, தற்போது மகாராஷ்டிராவின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே!
“சாதாரண ஆட்டோ டிரைவராக வாழ்க்கையைத் தொடங்கியவர், இன்று மகாராஷ்டிராவின் முதல்வராகவிருக்கிறார். சிவசேனாவின் அடிமட்டத் தொண்டன் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை அனைவருடனும் நன்றாகப் பழகக் கூடியவர் ஷிண்டே. இனி மகாராஷ்டிராவில், ஷிண்டே தலைமையிலான அரசு பால் தாக்கரேவின் கனவுகளை நிறைவேற்றப் பாடுபடும்” என்கிறார்கள் ஷிண்டேவின் ஆதரவாளர்கள்.