ஆஸ்கர் அழைப்பை ஏற்ற சூர்யா – 'அருமை தம்பி' எனப் பாராட்டிய கமல்ஹாசன்

ஆஸ்கர் விருது தேர்வுக்குழு உறுப்பினராக சேர நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு வந்தநிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் திரையுலகப் பிரபலங்களிடையே மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு, பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை வழங்கும் தேர்வுக்குழுவில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். விருதுக்கான படங்களை பரிந்துரை செய்யும் குழுவின் உறுப்பினர்களான இவர்கள் தங்களுக்குப் பிடித்த படங்களுக்கு வாக்களிக்க முடியும்.

இந்தச் சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகரும் இல்லை. இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவுக்கு, ஆஸ்கர் விருது விழாவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

image

அந்தவகையில் நடிகர் கமல்ஹாசன், சூர்யாவுக்கு தனது ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் எனது அருமை சகோதரர் சூர்யாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி அண்ணா என்று ட்விட்டரில் நெகிழ்ச்சியாக சூர்யா பதிலளித்துள்ளார். ஏற்கனவே ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய சூர்யாவுக்கு, தனது நீண்டகால மிக ஆடம்பரமான ரோலக்ஸ் வாட்சை கமல்ஹாசன் பரிசளித்திருந்தார்.

image

இந்நிலையில் சூர்யாவுக்கு ட்விட்டர் வாயிலாக ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர அழைப்பு வந்ததற்கு கமல்ஹாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஆஸ்கரின் அழைப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ள சூர்யா, அனைவரையும் பெருமைப்படுத்த எப்போதும் பாடுபடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

image

உலகம் முழுவதும் உள்ள 397 பிரபலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஆஸ்கரின் அழைப்பில், இந்தியா சார்பில் நடிகர் சூர்யாவுக்கு மட்டுமல்லாது பாலிவுட் நடிகை கஜோல், இயக்குநர் பான் நலின் மற்றும் ஆவணப்பட இயக்குநர் சுஷ்மிஷ்‌ கோஷ் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.