சென்னை: இந்தியாவின் பழமையான ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம் நேற்று முன்தினம் (ஜூன் 28) 166 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையம், இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாகத் தொடரும் என்று தெற்கு ரயில்வே புகழாராம் சூட்டியுள்ளது.
தெற்கு ரயில்வேயின் சென்னை புறநகர் வலையமைப்பில் ராயபுரம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாகும். இது, இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பழமையான ரயில் நிலையமாகும்.
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-அரக்கோணம் மார்க்கத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. இங்கு தற்போது, 40 ஜோடி மின்சார ரயில்களும், 7 ஜோடி விரைவு ரயில்களும் கையாளப்படுகின்றன.
மாதம் ஒன்றுக்கு 10,500 பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம், சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானமாக ஈட்டப்படுகிறது.
ரயில் நிலைய வரலாறு
கடந்த 1849-ம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தின் மறுசீரமைப்பால், தென்னிந்தியாவில் புதிய ரயில் பாதைக்கான திட்டம் புத்துயிர் பெற்றது. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் ஆங்கிலேய வணிகர்கள் மற்றும் பூர்வீக வாசிகளின் குடியேற்றங்கள் இருந்ததால், புதிய நிலையத்துக்கான இடமாக ராயபுரம் தேர்வு செய்யப்பட்டது.
தெற்குப் பாதையின் பணிகள் 1853-ல் தொடங்கி, ராயபுரத்தில் இருந்து ஆற்காடு வரை ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. ராயபுரம் ரயில் நிலையம் 1856-ம் ஆண்டு ஜூன் 28-ல் அப்போதைய கவர்னர் லார்ட் ஹாரிஸால் பிரதான முனையமாக திறக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் முதல் பயணிகள் சேவையை ராயபுரம் ரயில் நிலையம் வழங்கியது. இதன்மூலம், ரயில்வேயின் வளமான வரலாற்றில் தனது முத்திரையை பதிவு செய்தது. முதல் பயணிகள் ரயில் சேவை ராயபுரம்-வாலாஜா சாலை வரை இயக்கப்பட்டது.
இந்த நிலையத்தை வில்லியம் அடெல்பி டிரேசி என்பவர் பாரம்பரிய பாணியில் வடிவமைத்தார். தற்போது, இந்நிலையத்தின் ஒரு முனை சரக்கு ரயில்களின் போக்குவரத்துக்காகவும், பிரதான கட்டிடத்தை ஒட்டிய நடைமேடை பயணிகள் ரயில்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்நிலையம் நேற்று முன்தினம் (ஜூன் 28) 166 ஆண்டுகளை நிறைவு செய்தது. ராயபுரம் ரயில் நிலையம், இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாகத் தொடரும் என்று தெற்கு ரயில்வே புகழாரம் சூட்டியுள்ளது.
மேலும், இந்நிலைய கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.