கடந்த 1997-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் உள்பட 7 பேர் படுகொலை மதுரை மாவட்டம் மேலூா் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்ப்பட்டனர். அவர்கள் புதைக்கப்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் விடுதலைக்களம் என்ற நினைவு மண்டபத்தையும், ஊராட்சித் தலைவா் முருகேசன் அரை வடிவ உருவச்சிலையையும் நிறுவி இருக்கின்றனர்.
இந்த நினைவிடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். அதன்படி மேலவளவு கிராமத்தில் முருகேசன் மற்றும் 6 பேரின் 25-வது நினைவு தினம் இன்று (ஜூன் 30) கடைபிடிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மேலவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் மேலவளவு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் ஐந்து நபர்களின் 25வது நினைவு தினம் 30-6-2022 அன்று கடைபிடிக்கப்பட உள்ளது.
எனவே அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மேலவளவு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 12 டாஸ்மாக் கடைகள் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.
எனவே இந்த 2 நாட்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.”என கூறியுள்ளார்.