அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒவ்வொரு நாளும் மோதல் உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 14 ஆம் தேதி முதல் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் புயலாக வீசி வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிக பொதுக்குழு கூட்டம் பெரும் களேபரமாக நடைபெற்றது. இதையடுத்து, ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஒ.பி.எஸ் தேர்தல் ஆணையத்திடமும் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளார். இப்படி, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது
இந்த சூழ்நிலையில்தான், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள சுமார் 500-க்கு மேற்பட்ட பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு படிவம் ஏ மற்றும் படிவம் பி வழங்குவதற்காக, அந்த படிவங்களில் கையெழுத்திட தான் தயாராக உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார். மேலும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தாயாரா என கடிதத்தில் கேட்டிருந்தார்.
இந்த கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஓ. பன்னீர்செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கழகப் பொருளாளர் அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. கூட்டத்தை புறக்கணித்தது ஏன் மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்துகொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையுதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“