உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததன் மூலம் அக்கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 34 பதவிகளுக்கு மட்டும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் கட்சி வேட்பாளர்களை அங்கீகரித்து படிவம் ‘ஏ’ மற்றும் படிவம் ‘பி’ ஆகியவற்றில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. கட்சித்தலைமை கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிடும் அதிமுகவினர் சுயேச்சையாக களமிறங்க உள்ளனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36 ஆவது வார்டு, தஞ்சாவூர் மாநகராட்சியில் 8ஆவது வார்டு ஆகியவற்றில் அதிமுகவினர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். தேனி பெரியகுளம் நகராட்சியில் 26ஆவது வார்டிலும், மயிலாடுதுறை நகராட்சியில் 19ஆவது வார்டிலும் அதிமுக கட்சியினர் சுயேச்சையாக களமிறங்குகின்றனர். மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வார்டு 7 மற்றும் கடலூர் மாவட்டத்தில் வார்டு 26 ஆகியவற்றில் அதிமுகவினர் சுயேச்சையாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM