நபிகள் நாயகம் விவகாரத்தில் பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டதாக, கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், டெய்லர் ஒருவர் இரண்டு நபர்களால் தலைதுண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கொலையாளிகளான கவுஸ், ரியாஸ் ஆகியோரை அன்றிரவே போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த படுகொலை காரணமாக எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படலாம் என அதை தடுக்கும் விதமாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி உடனடியாக நாட்டு மக்களிடம் பேசவேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றிற்கு இன்று சிறப்பு பேட்டியளித்த அசோக் கெலாட், “நுபுர் ஷர்மாவின் கருத்துக்குப் பிறகு நாட்டில் வகுப்புவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே பிரதமர் மோடி உடனடியாக நாட்டு மக்களிடம் பேசி, மக்களை நிதானத்துடன் செயல்பட சொல்ல வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு முதலமைச்சரிடமும் பேசி வகுப்புவாத சம்பவங்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நானும், மாநில மற்றும் நாட்டு மக்கள் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுப்பேன். வன்முறை இதற்கு தீர்வல்ல” எனக் கூறினார்.
பேட்டிக்கு முன்னதாக அசோக் கெலாட், கொலைசெய்யப்பட்ட கன்ஹையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.