எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே பாஜகதான் என்று அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இதில் 99 சதவிகித நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்.க்கு தான் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வரும்நிலையில், இரட்டை தலைமை தான் சரி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். மோதலால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அக் கட்சி தொண்டர்கள் சின்னம், கட்சி இருந்தும் சுயேட்சையாக போட்டியிடும் நிலைமைக்கு ஆளாகி உள்ளனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது என்று இ.பி.எஸ். எழுதியுள்ள கடிதத்தால் அக்கட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் தமிழக சட்டப்பேரவை குழு தலைவரும்,நெல்லை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை.
அது எல்லாருக்குமே தெரியும். அ.தி.மு.க.வுக்கு, பா.ஜ.க அரசு பல்வேறு சூழ்நிலைகளில் நட்புடன் ஆதரவு அளித்தது மட்டுமில்லாமல், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதும் பா.ஜ.க அரசு தான். தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். பொதுவாக அ.தி.மு.க.வில் ஒவ்வொரு தலைவர்களின் மறைவுக்கு பின்னரும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது வழக்கம் தான். ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியில் இந்த மாதிரி சிறு சிறு பிரச்சனைகள், சலசலப்புகள் தோன்றும். பின்னர் சரியாகிவிடும். அதுமாதிரிதான் இது” என்று அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM