எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு விவரங்களின் மையங்கள் வெளியீடு

புதுடெல்லி: நீட் தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தகுதி தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தொடங்கி மே 20ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 18 லட்சத்து 72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 42,286 பேர் பதிவு செய்துள்ளனர். திட்டமிட்டபடி நீட் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்நிலையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள நகரங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும். கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.