வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணம் செய்த வகையில் அரசுக்கு 62 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் அவரது மனைவியர், ரயில்களில் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் இலவசமாக பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, முன்னாள் எம்.பி.,க்கள் முதல் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் தனியாகவும், இரண்டாம் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் துணையுடனும் பயணிக்க சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்களில் பயணித்த வகையில் அரசுக்கு ஏற்பட்ட செலவு கணக்கை சமர்ப்பிக்குமாறு, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில், லோக்சபா செயலகம் அளித்த பதில்:கடந்த 2017 – 22 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 26.82 கோடி ரூபாயும், இந்நாள் எம்.பி.,க்களின் பயணத்துக்கு 35.21 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலமான 2020 – 21ல் மட்டும், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 2.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement