சென்னை: “ஓ.பன்னீர்செல்வம், என்னுடைய பழைய நண்பர். அரசியல் ரீதியாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “இன்னொரு கட்சிப் பிரச்சினையில் நான் தலையிட மாட்டேன். முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படிதான் நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். அதுவரை, நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் மிச்ச மீதியிருந்தால், அங்கு சகித்துக்கொண்டிருக்காமல், எங்களிடம் வாருங்கள் என்றுதான் சொல்லமுடியும்.
அதிமுக இந்த மாதிரி செல்வதைப் பார்க்கும்போது, எனக்கு வருத்தமாகத்தான உள்ளது. அவர்கள் இருவரும் நடத்தும் பதவிச் சண்டையில் நாங்கள் சென்று தலையிட முடியாது. இதை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளமாட்டோம், திமுகதான் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தொடங்கிய பின்னர், அப்போது ஜூலை மாதம் 2018-ல் சந்தித்த பின்னர், எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவருடைய துணைவியர் மறைவுக்கு நட்பு காரணமாகத்தான் சென்று வந்தேனே தவிர வேறொன்றுமில்லை. அவர் என்னுடைய பழைய நண்பர். அரசியல் ரீதியாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை.
4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரை, அவர்களுக்குள் இருந்த சண்டை சச்சரவுகளை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர். ஆட்சி போனபிறகு, மீண்டும் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமையென்று போட்டியிருக்கிறது. இது அவர்கள் செய்கின்ற தவறு, நாம் என்ன செய்யமுடியும். அவர்களுக்கா வருத்தப்படதான் முடியும்” என்று அவர் கூறினார்.