புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜி – என்ஆர்இஜிஏ) கீழ், கடந்த மே மாதம் 2 கோடியே 61 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளன. இது கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 லட்சம் குடும்பத்தினர் கூடுதலாகும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (என்ஆர்இ ஜிஎஸ்) கீழ், ஊரக பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் வயது வந்தோர், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் வேலைபெற்று ஊதியம் பெறுகின்றனர். இது தொடர்பாக என்ஆர்இஜிஏ இணையளத்தில் கூறியிருப்பதாவது:
கடந்த மே மாதத்தில் 2 கோடியே 61 லட்சம் குடும்பங்கள், என்ஆர்இஜி திட்டத்தின் கீழ் வேலை பெற்றுள்ளன. கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 39 லட்சம் குடும்பத்தினர் கூடுதலாக பணியாற்றியுள்ளனர்.
கடந்த 2020 மே மாதத்தில், ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் சொந்த கிராமங்களுக்கு திரும்பியதால் 3 கோடி யே 30 லட்சம் பேர் என்ஆர்இஜிஏ திட்டத்தின்கீழ் பணியாற்றினர். பெருந்தொற்றுக்கு முன் கடந்த 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக இருந்தது.
இந்தாண்டு ஏப்ரலில் 1 கோடியே 86 லட்சம் குடும்பங்கள் வேலை பெற்றன. இது கடந்தாண்டு ஏப்ரல் மாத எண்ணிக்கையை விட 26 லட்சம் அதிகம்.
மொத்தம் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம், உ.பி, ராஜஸ்தான் உட்பட 21 மாநிலங்களில், என்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் 1 கோடி 73 லட்சம் குடும்பங்கள் வேலை பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்தாண்டு இதே காலத்தில் 1 கோடி 5 லட்சமாக இருந்தது. தற்போது 68 லட்சம் குடும்பத்தினர் அதிகரித்துள்ளனர்.
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, மேகாலயா, பஞ்சாப் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மே மாதத்தில் 88 லட்சத்து 19 ஆயிரம் குடும்பத்தினர் வேலை பெற்றுள்ளனர். இது கடந்தாண்டில் இதே கால எண்ணிக்கையை விட 29 லட்சம் குறைவு.
உத்தர பிரதேச மாநிலத்தில் என்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதத்தில் 26.28 லட்சம் குடும்பத்தினர் வேலை பெற்றுள்ளனர். இது கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 17.38 லட்சம் அல்லது 195 சதவீதம் அதிகம். தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 17.17 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை இந்தாண்டு மே மாதம் 33.10 லட்சமாக அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கரில் குறைந்தது
சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை அதிகளவில் குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் 9.10 லட்சம் குடும்பங்கள் வேலை பெற்றுள்ளன. ஆனால் கடந்தாண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 15.89 லட்சமாக இருந்தது.