திருச்சி: தீவிரமடைந்து வரும் கரோனா பரவலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்புக்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. கரோனா பரவல் தீவிரமடைந்து வருவது குறித்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் டி.நேரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
தற்போது பரவிவரும் கரோனா வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும், இதன் தாக்கத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவோ, செயற்கை சுவாசம் தேவைப்படவோ இல்லை. உயிரிழப்புகளும் அதிகம் இல்லை. மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரை கடந்த கரோனா அலை பரவலின்போது பின்பற்றப்பட்ட அதே சிகிச்சை முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது. கரோனா பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளோம். தற்போது, மருத்துவமனையில் 1,600 படுக்கைகள் உள்ளன. இதில், 1,350 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை.
கரோனா 2-ம் அலை பரவலின்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால், இந்த முறை அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 21 கேஎல் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்குகள், நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் வரை உற்பத்தி செய்யக்கூடிய 3 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், 450 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன.
மேலும், கரோனா தீவிர சிகிச்சைக்காக அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 படுக்கைகளைக் கொண்ட உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கென தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 4,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யக்கூடி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போது தினமும் 2,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் முடிவில், 1.6 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகிறது.
12 வயதைக் கடந்த அனைவருக்கும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.வழக்கம்போலவே இந்த வகை கரோனாவுக்கும் கடும் தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல் ஆகியவையே அறிகுறிகளாக உள்ளன. இம்முறை கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் என அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டியது அவசியம். குழந்தைகள், சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுவது அவசியம். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே கரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.