வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
தருமபுரி மாவட்டத்தின் தகடூர் புத்தகப் பேரவையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு தருமபுரி புத்தகக் கண்காட்சி தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 102 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
ஜுன் 24 முதல் – ஜுலை 4 வரை நடைபெறும் புத்தக திருவிழாவிற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப. தலைமையேற்க, வேளாண் மற்றும் உழவர் நலத்துறைகளின் அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவங்கி வைத்தனர்.
பதினொரு நாட்கள் நடைப்பெறும் இப்புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் பல்வேறு தலைப்புகளின் கீழ் பாடலாசிரியர் யுகபாரதி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் சோம வள்ளியப்பன், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன், ஊடகவியலாளர் மு. குணசேகரன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், ஜெ.ஜெயரஞ்சன், எழுத்தாளர் ஆர்.பாலகிருஷ்ணன், எழுத்தாளர் கண்மணி குணசேகரன், எழுத்தாளர் அழகிய பெரியவன், மருத்துவர் கு.சிவராமன் போன்ற தமிழகத்தின் முக்கிய பேச்சாளர்கள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்று உரையாற்றும் சிறப்பு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
வரும் ஆண்டுகளில் இது போன்று சிறப்பு நிகழ்வுகளில் ஒரு நாள் மட்டுமாவது முழுவதும் குழந்தைகள் பங்கேற்கும், குழந்தைகளுக்கான உரையாடல்கள், குழந்தை இலக்கியங்கள், குழந்தைகளுக்கான நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் குழந்தைகளிடத்திலும், மாணவர்களிடத்திலும் வாசிப்பு ஆர்வத்தை அதிகளவில் கொண்டுச் சேர்க்க முடியும் அவர்களும் புத்தகக் கண்காட்சி ஆர்வத்தோடு வந்துச் செல்வார்கள்.
இப்புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் “கைபேசியை விடு… புத்தகத்தை எடு..!’’ என்பதாகும். இன்றைய சூழலில் அனைவருடைய கைகளிலும் கைபேசி தவழ்ந்துக் கொண்டிருக்கிறது. நேரம் போவது கூட தெரியாமல் நாம் அதிலேயே மூழ்கி போய்விடுகிறோம். கைபேசி இல்லாத காலகட்டங்களில் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் பழக்கம் நம்மிடம் அதிகமாய் இருந்தது ஆனால் இப்போது நமக்கு தேவையான அனைத்தும் இணையதளத்தில் கிடைப்பதாலும், மின்னணு புத்தகங்கள் வந்துவிட்டதாலும் , புத்தகம் வாங்கி படிக்கும் ஆர்வம் இன்றைய தலைமுறையினரிடம் குறைந்துவிட்டது. ஆனால் இது ஆரோக்கியமானது அல்ல. இத்தருணத்தில் நாம் கைபேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு புத்தகங்களை கையில் எடுக்க வேண்டும் என்ற அக்கறையோடு இப்புத்தகத் திருவிழாவை நடத்துவது பாராட்டுகுரியதாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தகத் திருவிழா என்றால் சென்னை தான். முக்கியமான புத்தகங்களின் குறிப்பெடுத்துக் கொண்டு வருடத்திற்கு ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று மொத்தமாக புத்தகங்கள் வாங்கி வந்த நாட்களும், வாசகர்களும் ஏராளம். ஆனால் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக் கண்காட்சி நடைப்பெறுவது மகிழ்ச்சியானதும்… வாசகர்களுக்கு உற்சாகமானதும் ஆகும். முக்கியமாக தருமபுரி மாவட்டதிற்கு…!
ஏனெனில் அப்பொழுதெல்லாம் தருமபுரி மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இன்று அது மறைந்து கல்வியறிவு நிறைந்த மாவட்டமாக வளர்ந்து வருகிறது. ஆனால் கலையிலும், இலக்கியத்திலும் இன்னும் பின் தங்கியே உள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பள்ளியின் சார்பாக மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வரப்படுகின்றன. புத்தக அரங்குகளுக்குள் வரும் மாணவர்கள் இவ்வளவு புத்தகங்களையும் ஒரே இடத்தில் பார்த்து ஆச்சரியமும் பிரமிப்பும் அடைவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேசமயம் அரங்குக்குள் நுழைந்து தங்களுக்கு பிடித்த தலைப்புகளில் அவ்வளவு ஆர்வத்தோடும் ஆசையோடும் புத்தகத்தைப் பார்க்கும் மாணவர்கள் இறுதியில் தங்களிடம் அதை வாங்க பணம் இல்லாமல் புத்தகத்தை விட்டு விலக மனமும் இல்லாமல் தயங்கி அரங்கை விட்டு வெளியே செல்லும் போது மனம் சற்று கணத்துப் போகிறது. வாசகர்கள் வருகை, பள்ளி மாணவர்களின் வருகை என ஓரளவுக்கு இருந்தாலும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைப்பெறுவதால் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்களின் வருகை இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.
இனி வரும் காலங்களில் புத்தக வாசிப்பு அதிகரிக்க வேண்டும் நிறைய புதிய வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தர வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். முக்கியமாக பெற்றோர்கள் புத்தக சேமிப்பும், புத்தகங்கள் வாங்க சிறு சேமிப்பும் செய்து பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும். வரும் ஆண்டுகளில் தருமபுரியில் நடைப்பெறும் இப்புத்தகத் திருவிழா ஏராளமான வாசகர்கள், படைப்பாளர்கள் நிறைந்த பெருவிழாவாக ஜொலிக்க வேண்டும்..!
–கோ.ராஜசேகர், தருமபுரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.