தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய பதவிகளில் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், கடந்த மார்ச் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்ற தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையிலுள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தேர்வர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவல்கள் தெரிவிக்கப்படமாட்டாது.
அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திலேயே பகிரப்படும். அதுபோல, குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் தேர்வர்களுக்கு தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.