திருவனந்தபுரம்: கேரளாவில் ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோய் பரவி காட்டுப் பன்றிகள் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் இந்த நீர்வீழ்ச்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்து விழுந்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பன்றிகளின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிகளின் உடலில் பாசிலஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியா பரவியிருந்தது. இதையடுத்து, மற்ற விலங்குகளுக்கும் ஆந்த்ராக்ஸ் பரவாமல் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பன்றிகளின் உடல்களை புதைப்பதற்கும், பரிசோதனை நடத்துவதற்கும் சென்ற அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.