வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். 5வது நாள் நடைபெற்ற பாலாறு பெருவிழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சந்நியாசிகள் முன்னிலையில் சனாதன தர்மம் பற்றி பேசினார். அதைவிட, அவர் முழுக்க முழுக்க தமிழில் பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பார்த்து பேசினாலும், பெரிய அளவுக்கு உச்சரிப்பு பிழை இல்லாமல் நல்ல தமிழ் உச்சரிப்புடன் தனது உரையை நிகழ்த்தினார். அதைவிட, பார்த்து பார்த்து பேசாமல், நினைவில் இருந்ததை ஒப்புவிக்கும் விதமாக பேசியது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. சில தமிழ் வார்த்தைகளை அவர் சரியாக உச்சரித்த விதம் பலரையும் ஆச்சரியம் அடையச் செய்தது.
ஆளுநர் ஆர்.என். ரவி இதுவரை நிகழ்ச்சிகளில் தமிழில் பேசாத நிலையில், சந்நியாசிகள் கூட்டத்தில் தமிழில் நல்ல உச்சரிப்புடன் பேசியது கவனம் பெற்றுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், நதிகளை வழிபடுவது பாரதம் முழுவதும் இருக்கும் வழக்கம். நாடு முழுவதும் இந்த பழக்கம் உள்ளது. சில நதிகளை நாம் தினமும் பிரார்த்தனை செய்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல. இது பாரதத்தில் பழங்காலத்தில் இருந்து இருக்கும் பாரம்பரியம்.
நண்பர்களே தமிழ் மிகவும் பழமையான மொழி. அழகான மொழி. தமிழ் மிகவும் சக்திவாய்ந்த மொழி. தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் ஆகும். ஒருநாள் அவர்களை போல தமிழ் பேச வேண்டும். அவர்களை போல உச்சரிக்க வேண்டும்.
அதுவரை மட்டும் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தமிழ் முழுமையாக கற்ற பின் தமிழில் பேசுவேன் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார் . அதன்பின் ஆங்கிலத்தில் பேசிய ரவி, நாம் பாலாற்றை வணங்க இங்கே வந்து இருக்கிறோம். இந்தியா முழுக்க நதிகளை வணங்கும் வழக்கம் உள்ளது. அது இங்கும் உள்ளது. இதுதான் நம்முடைய கலாச்சாரம். இதுதான் சனாதன கலாச்சாரம், என்று ஆளுநர் ரவி தனது உரையில் குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“