சான்டியாகோ: தென் அமெரிக்க நாடான சிலியில் கான்சார்சியோ இன்டஸ்டிரியல் டி அலிமென்டோஸ் (சியால்) நிறுவனம் உள்ளது.
அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் 5,00,000 பெசோஸ் (சிலி நாட்டு கரன்சி) ஆகும். இந்திய மதிப்பில் ரூ.43 ஆயிரம்.
கடந்த மே மாதத்தில் அந்த ஊழியருக்கு தவறுதாக 286 மடங்கு ஊதியம் அவரது வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டுவிட்டது. அதாவது 165,398,851 பெசோஸ்கள் (இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி) வரவு வைக்கப்பட்டது.
இதை அறிந்த அந்த ஊழியர் பணத்தை உடனடியாக வங்கிக்கு அனுப்பிவிடுவதாக தெரிவித்தார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை அனுப்பவில்லை. தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு பணத்துடன் தலை மறைவாகிவிட்டார்.
அவரைத் தொடர்புகொள்ள நிறுவனம் முயன்றபோது அவர் தலைமறைவான சம்பவம் தெரியவந்தது. கடந்த 2-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சான்டியாகோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.