குவாஹாட்டி: அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மாகாராஷ்டிராவை சேர்ந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் ரூ.51 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா விகாஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அக்கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என அவர்கள் கோரினர்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களும் சுயேச்சை எம்எல்ஏக்கள் சிலரும் கடந்த 22-ம் தேதி அசாம் மாநிலம் குவாஹாட்டி வந்தனர். இங்குள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கினர். அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் வேளையில், மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்கள் இங்கு சொகுசு ஓட்டலில் தங்குவதா என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களின் செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர் நேற்று கூறும்போது, “அசாம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு எங்களின் பங்களிப்பாக ரூ.51 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு ஏக்நாத் ஷிண்டே வழங்கியுள்ளார். இங்குள்ள மக்கள் படும் துயரத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது” என்றார்,