புதுடெல்லி: ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திர சேகர் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு வாங்கித்தர தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான ஹவாலா புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், டெல்லியில் இருக்கும் தன் மீதான அனைத்து முறைகேடு வழக்குகளையும் கர்நாடகா அல்லது வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும். திகார் சிறையில் இருக்கும் தனக்கும் தனது மனைவி லீனா பாலுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதால் வெளிமாநில சிறைக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சுகேஷ் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட சுகேஷ் சந்திரசேகர் தரப்பு வழக்கறிஞர், இதனை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். அதை நிராகரித்த நீதிபதிகள், ‘இதை அவசரமாக விசாரிக்க எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது யாரும் எதுவும் செய்துவிட முடியாது,’ என தெரிவித்தனர்.