பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடந்தது. பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறும் 2-வது மன்ற கூட்டம் இதுவாகும்.
மன்ற கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், பொறுப்பு கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்றைய கூட்டத்தில் நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால், காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. மன்ற கூட்டத்தில் மொத்தம் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முக்கியமான தீர்மானமாக, சென்னை மாநகராட்சி சார்பில் தியாகராய நகர் தணிகாசலம் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டில் இருந்தும் இதில் மாத வருமானம் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 175 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
மேலும், தியாகராய சாலையில் அதிகளவிலான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வைக்கும் வகையிலும், தியாகராய சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் நான்கு சக்கர வாகனம் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தம் செய்ய ரூ.40இல் இருந்த கட்டணம் ரூ.60 ஆகவும், இரண்டு சக்கர வாகனம் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தம் செய்ய ரூ.10 ஆக இருந்த கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் காரணமாக தியாகராய சாலையில் உள்ள வாகன நிறுத்தம் மதிப்புக் கூட்டப்பட்ட வாகன நிறுத்த மண்டலமாக (பிரீமியம் பார்க்கிங் மண்டலம்) மாற்றப்பட்டுள்ளது. சாலையின் ஒரு புறத்தில் வாகனங்கள் நிறுத்தவும் மறுபுறம் நோ பார்க்கிங் ஆக மாற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.