த. வளவன், மூத்த பத்திரிகையாள்ர்
இந்த பாடலில் தலைவியின் வருத்தம் பதிவாகியுள்ளது. காதலிக்கும்போது தந்த விடுதலையைக் கற்பில் மறக்கிறான் தலைவன் என்ற ஏக்கம் பல பெண்பாற் புலவர் பாடல்களில் எதிரொலிக்கின்றது.
“நோம் என் நெஞ்சே, நோம், என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே”
அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் – என்ற காரணத்தால் தலைவி வருத்தம் கொள்கிறாள். காதலிக்கும் வரை அமைதற்கு அமைந்த தன்மை உடைய காதலன், காதலித்துத் திருமணம் ஆனபின்பு அமைவிலர் ஆனதின் காரணம் யாது என்பது தலைவிக்குத் தெரியாததாகின்றது.
தலைவியைக் காண ஒரு நாள் மட்டும் வரவில்லை. இருநாள்கள் இல்லை. பல நாட்கள் தலைவியின் அன்பினைப் பெறத் தலைவன் முயற்சித்தான். பணிந்து பேசினார். அவளின் நெஞ்சம் அவனை ஏற்றுக்கொண்டபின் சென்றவன் சென்ற இடம் தெரியவில்லை. ஏற்றுக்கொண்டபின் அவனின் நடைமுறைகள் மாற்றம் பெற்றுவிடுவது ஏனோ என்று தோழியும் தலைவியும் கவலைப்படுகின்றனர்.
‘‘ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன்
பல்நாள் வந்து பணிமொழி பயிற்றி என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்தபின்றை
வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
வேறுபுலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே”
என்ற பாடலில் தலைவனின் பணிந்த நடைமுறை நெஞ்சத்தைப் பெற்றபின்பு மாறிய நடப்பினை வருத்தத்துடன் பகிர்வதாக உள்ளது.
‘‘பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயில் இருள் நடுநாள் துயில் அரிதுஆகித்
தெள்நீர் நிகர்மலர் புரையும்
நல்மலர் மழைக்கணிற்கு எளியவால் பனியே”
தலைவன் சுரம் கடந்து பொருள் தேடிச் சென்றான். அவன் வரவை எண்ணித் தலைவி கண்ணீரை மழையாகப் பொழியும் நிலையில் ஏங்கிக் காத்திருக்கிறாள். இவ்வாறு தலைவனுடன் வாழும் வாழ்க்கையில் பெரிதும் பிரிவையே சந்திப்பவளாக, தன் இல்லற உரிமையைக் கூடப் பெற இயலாதவளாகக் குறுந்தொகைத் தலைவியர் வெளிப்பட்டுள்ளனர்.
நாட்டின், நாட்டின், ஊரின், ஊரின், குடிமுறை, குடிமுறை தேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே என்ற நிலையில் எங்கும் தேடியும் கிடைக்கப்பெறாதவனாகத் தலைவன் மறைந்துதொழிகிறான். அவனைத் தேடி அவன் வரவை நோக்கிக் காத்திருக்கிறாள் தலைவி.
பின்னிரவிலாவது வந்துவிடுவான் என்று ஒரு தலைவி எண்ணுகிறாள். வீட்டின் கதவை மூடச் சென்றவள் அப்போதாவது தலைவன் வந்தவிடுவான் என்று நம்பிக்கை கொண்டு, தலைவி இப்புறமும் அப்புறமும் பார்க்கிறாள்.
‘‘புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார்இல் மாலைப்
பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர்
வாரார் தோழி! நம் காதலரே!”
என்றவாறு தலைவன் வரவை நோக்கிக் கதவுகளை மூடக் கூடத் தாமதம் செய்கிறாள் தலைவி.
செவ்விய காதல் என்ற நிலையில் சித்திரிக்கப்பெறும் குறுந்தொகைக் காதல் பெரும்பாலும் பெண்ணுக்கான உரிமையை வழங்க வாய்ப்பே தரவில்லை என்பதே மேற்கண்ட பாடல்களின் வழி பெறத்தக்க உண்மையாகும்.
காதல் வருத்தத்தைத் தன் உடல் சார்ந்த வருத்தமாகப் பெண்படைப்பாளிகள் வெளியிட்டுள்ளனர். ஆண்படைப்பாளர்களிடம் இல்லா இந்நிலைப் பெண் படைப்பாளர்களுக்கான தனித்தன்மையாக விளங்குகிறது.
‘‘சேறும் சேறும்’ என்றலின் பண்டைத் தன்
மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று
மன்னி கழிக என்றேனே, அன்னோ
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
கருங்கால் வெண்குருகு மேயும்
பெருங்குளம் ஆயிற்று என் இடை முலை நிறைத்தே”
என்ற பாடலில் தலைவியின் வருத்தம் நிலை கொள்ளும் இடமாக மார்பகம் அமைகின்றது. எந்தை என்று இங்குத் தலைவன் தந்தையாகவும் தலைவியால் எண்ணப்பெறுகிறான். மேலும் தலைவியின் மார்பகத்து இடைவெளியில் உள்ளத் துயரம் பெருங்குளமாகக் காட்சி தருகிறதாம். அக்குளத்தில் கரிய கால்களை உடைய வெண்பறவையான கொக்கு மேய்கிறதாம்.
“அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில்மலர தூம்புடை திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு இவள்
இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்
அரியம் ஆகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே”
என்ற இப்பாடலில் தலைவியின் மார்பில் உறங்காத நெருக்கம் அற்றவனாகத் தலைவன் விளங்குகிறான். இது கருதி தலைவி வருந்துகிறாள். காதலிக்கும் பொழுது பொறுமையுடன் அனைத்தையும் பொறுத்துக்கொண்டவன் தற்போது அவற்றை மறந்தது ஏனோ என்ற ஏக்கம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“