கோவை: ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வெட்கிரைண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என, உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவையில் நடைபெற்றுவரும் பல்வேறு தொழில்களில் முக்கியமானது வெட்கிரைண்டர் உற்பத்தி. கோவையின் அடையாளமாக உள்ள இந்த வெட்கிரைண்டர்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய தரம் வாய்ந்த கற்களால் இவை உருவாக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கோவையில் இத்தொழில் சார்ந்து உள்ளன.
கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியைப் பொறுத்தவரை தற்போது கன்வென்சனல் எனப்படும் வழக்கமான பெரிய சைஸ் ரகம் (ஒரு லிட்டர் முதல் 40 லிட்டர் வரை), டில்டிங் எனப்படும் சாய்க்கக்கூடிய ரகம் (2 லிட்டர் முதல் 40 லிட்டர் வரை) மற்றும் டேபிள் டாப் கிரைண்டர்கள் (2 மற்றும் 3 லிட்டர்) உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கோவையின் வெட்கிரைண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
கரோனாவின் தாக்கம், மூலப்பொருட்கள் விலை உயர்வு என அடுத்தடுத்த சிக்கல்களை சந்தித்து வரும் வெட்கிரைண்டர் உற்பத்தி தொழில் ஏற்கெனவே பாதிப்பில் உள்ளது. இந்நிலையில், வெட்கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதனால், கிரைண்டர்கள் விலை மேலும் உயர்ந்து, விற்பனை சரிவு ஏற்பட்டு, தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சவுந்திரகுமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:
கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது 50 சதவீதம் மட்டுமே கிரைண்டர் உற்பத்தி செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யில் தொடங்கிய பிரச்சினை, கரோனா பாதிப்பு, ஊத்துக்குளியில் செயல்பட்டு வந்த குவாரிகள் மூடல், அதிகரித்துவரும் மூலப்பொருட்கள் விலை உயர்வு என தொடர்ந்து வருகிறது.
ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தியதால் கிரைண்டர்கள் விலை மேலும் உயரும். தற்போது 2 லிட்டர் டேபிள் டாப் கிரைண்டர் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதன் விலை மேலும் ரூ.500 முதல் ரூ.600 வரை உயரும்.
பெரிய சைஸ் ரகம் 2 லிட்டர் ரூ.4500-க்கு விற்கப்படும் நிலையில் அதன் விலை மேலும் ரூ.550 வரை உயரும். 40 லிட்டர் டில்டிங் கிரைண்டர் ரூ.90 ஆயிரத்துக்கும், கன்வென்சனல் கிரைண்டர் ரூ.60 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.
இனி இவற்றின் விலை கடுமையாக உயரும். விலை உயர்ந்தால் விற்பனை சரிவை சந்திக்கும். விற்பனை மந்தமானால் உற்பத்தியாளர்கள் தான் ஆர்டர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவற்றையெல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்