புதுடெல்லி: இதுவரை பிறப்பித்துள்ள உத்தரவுகளை நிறைவேற்ற, ‘டுவிட்டர்’ சமூக வலை தள நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு, ஜூலை 4ம் தேதி வரை இறுதி கெடு விதித்துள்ளது. சமூக வலைதளங்கள், இணைய பொழுதுபோக்கு தளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதி, அரசு அமைப்புகள் ஆட்சேபிக்கும் பதிவுகளை நீக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதை நிறைவேற்ற சமூக வலை தளங்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பிறகு ஏற்றன. ஆனால், டுவிட்டர் நிறுவனம் மட்டும் ஒன்றிய அரசின் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. இதையடுத்து, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற, ஜூலை 4ம் தேதி வரை கடைசி வாய்ப்பு தருவதாக, டுவிட்டர் நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, பயனாளிகள் பதிவிடும் பதிவுகளுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், அரசின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு, இந்த விலக்கு ரத்து செய்யப்படும். இதன்பிறகு, இந்த தளத்தில் வெளியிடப்படும் அனைத்து பதிவுகளுக்கும் நிறுவனமே பொறுப்பாகும். ஆட்சேபகரமான பதிவுகள் இருந்தால், நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.