இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது அக்கா கிருஷ்ண பிரியா கேரள அரசில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ண பிரியா திருமணமாகி முண்டகாயம் கிராமத்தில் வசிக்கிறார்.
சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று ஆண்டுதோறும், தவறாமல் தன் தம்பி கிருஷ்ணபிரசாத்தை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்வார் கிருஷ்ண பிரியா. ஆனால், இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக மே 24-ல் சகோதரர் தினத்தில் அவரால் போன் செய்ய முடியவில்லை.
இதையடுத்து கிருஷ்ண பிரசாத், அக்காவுக்கு போன் செய்தார். அப்போது அவர் போனை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிருஷ்ணபிரசாத், அதன்பிறகு அக்காவுக்கு போன் செய்யவில்லை. வாட்ஸ்-அப் தொடர்பையும் பிளாக் செய்தார்.
தம்பி கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ண பிரியா, கிருஷ்ண பிரசாத்துக்கு மிக நீண்டதொரு கடிதத்தை எழுதினார். பிறந்தது முதல் இருவரும் வளர்ந்தது, படித்தது, சண்டை, பாசம், நேசம், பிறந்தநாள், பெற்றோர் அன்பு, செலுத்திய அன்பு என நீண்ட கடிதத்தை, 12 மணி நேரத்தில் அவர் எழுதி முடித்தார்
பின்னர் அந்தக் கடித பார்சலை கிருஷ்ணபிரசாத்துக்கு அனுப்பினார். அந்த பார்சல் 5 கிலோ எடை கொண்டதாகவும், 434 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ‘யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்’ என்ற நிறுவனத்துக்கு, அக்கா தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பினார் கிருஷ்ணபிரசாத். இது ‘உலக சாதனை’ என அந்நிறுவனம் சான்றளித்து உள்ளது. விரைவில் இந்தக் கடிதம் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறவுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணபிரியா கூறும்போது, “சகோதரர் தினத்தில் தம்பிக்கு வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன். அவனது கோபத்தைத் தணிக்க கடிதம் எழுத விரும்பினேன். அது மீக நீண்ட கடிதமாகிவிட்டது. எனக்கும், அவனுக்கும் 7 வருட வித்தியாசம் உள்ளது. அதனால் என்னை எப்போதும் அம்மாவாகவும், ஆசிரியையாகவும் தம்பி பார்ப்பான்” என்றார்.
கிருஷ்ணபிரசாத் கூறும்போது, “இந்த சாதனை கடிதத்தை கின்னஸ் சாதனை புத்தக நிர்வாகிகளுக்கு நானும், எனது அக்காவும் அனுப்பியுள்ளோம். அது விரைவில் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.