தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தம்?

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், மதுரை ஐகோர்ட்டு கிளையும், காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசியர்களை நிரப்பும் செயல் ஆபத்தானது என விமர்சித்துள்ளது.  இந்த நிலையில்,  இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு வாய்மொழியாக  உத்தரவிட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளது. இடைநிலை ஆசிரியர்பணியில் 4,989  பணியிடமும், பட்டதாரி ஆசிரியர் களில் 5,154 பணியிடமும் 3,188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இந்த காலி பணியிடங்களுக்கு தற்காலி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாம் என பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு கல்வித்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள்,. ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரையிலான 10 மாதங்களும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஜூலை 2022 தொடங்கி பிப்ரவரி 2023 வரையிலான எட்டு மாதங்களுக்கு அந்தந்த பள்ளி அருகில் உள்ள தகுதி வாய்ந்த நபர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமித்துக்கொள்ளலாம் என்றும்,  இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 என மதிப்பூதியம் வழங்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இடைக்கால ஆசிரியர் நியமனத்துக்கான உத்தரவில், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று கூறப்படவில்லை. மாறாக, ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பணியிடத்தை நாடும்போது, டெட் தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இல்லையெனில், “இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலருக்கு முன்னுரிமை தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. கடந்த 2013 , 2014, 2017, 2019- ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித்தோ்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்து கிடக்கின்றனா். இந்தநிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, ஆசிரியர்களுக்கு செய்யும் துரோகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் இருக்கும்பொழுது, தோ்வில் தகுதி பெறாத அவா்களை நியமனம் செய்வது ஏன் என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தின் முக்கிய நுழைவு வாயில் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்டங்களில் உத்தரவிட்டப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

தகுதி இல்லாதவர்களையும், தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கும் பணி நியமனம் வழங்குவதாக எழுந்த புகார்கள் காரணமாக, தற்காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.