கடலூர்: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று கடலூர் அதிமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவான ஆ.அருண்மொழிதேவன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “கட்சியின் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்களின் ஆதரவுகளை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். இவர் வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக நிச்சயத்தபடி தேர்ந்தெடுக்கப்படுவார்.
தற்போது ஓபிஎஸ் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு சின்னத்தை வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுத்ததாகவும், அதை இபிஎஸ் புறக்கணித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வேட்பாளரே அறிவிக்காத நிலையில், இவர் யாருக்கு என்று சின்னம் கொடுப்பார். இவர் கடிதம் கொடுத்ததே தவறானது. அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் நம்பிக்கையை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். திமுகவும் வேண்டும், பாஜகவும் வேண்டும், அதிமுகவும் வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். இதை அதிமுக தொண்டர்கள் 100 சதவீதம் ஏற்கமாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்திருக்கிறார். தொண்டர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். ஆனால், ஒட்டு மொத்த தொண்டர்களால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.