துரோகம் தாங்குமோ நெஞ்சம் | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

காலை மணி ஏழு பத்து.தனது அறையில்.. பீரோவில் பதித்திருந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தாள் பத்மினி.ஏழரை மணிக்கு வீட்டிலிருந்துசற்று தூரத்திலிருக்கும் bus stop புக்கு அவள் பணியாற்றும் ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ஸின் cab வந்துவிடும்.எப்படியும் வீட்டிலிருந்து குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தை அடைய பத்துநிமிடம் நடந்தாக வேண்டும். இவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நாட்களில் அப்பா தியாகராஜன் டூவீலரில் bus stop வரை கொண்டு விடுவதாக தினமும் சொல்வதுண்டு.

பத்மினி மறுத்துவிடுவாள். வேண்டாம்ப்பா..பாக்குற வேலையே பொழுதன்னிக்கும் கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்தே பாக்குற வேலை.. காலேல தூங்கி எழுந்துக்கவேண்டியது குளிச்சு சாப்ட வேண்டியது cab ல ஏறி ஆபீஸ் போகவேண்டியது அங்கபோய் கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்கார வேண்டியது வேலமுடிஞ்சி மறுபடியும் கேப்ல வீட்டுக்கு வந்து சாப்ட்டு தூங்கவேண்டியது.. ஒடம்புக்கு exercise ஸே கெடையாது..ஒருமாசம் இப்டியே போச்சு தொப்ப விழுந்துடும்ப்பா..தினமும் போக பத்து நிமிஷம் வர பத்து நிமிஷமாவது நடக்கறேம்ப்பா என்று சொல்லிவிட்டாள்.

இப்போதே மணி ஏழுபத்து.. கட்ஷுவை காலில் மாட்டிக் குனிந்து ஷுவுக்கும் காலுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் விரல்விட்டு அட்ஜஸ் செய்து மாட்டி வீட்டை விட்டு வெளியே செல்வதற்குள் ஏழேகால் ஆகிவிடும்..கொஞ்சம் வேகமாக நடையைப்போட்டால் cab வர ஐந்து நிமிடத்திற்கு முன்னால் பஸ்டாப்பை அடைந்துவிடலாம் என்பதால் துரிதமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் பத்மினி.

Representational Image

சீப்பில் சிக்கியிருந்த தலைமுடியை எடுத்து இடதுகை ஆட்காட்டிவிரலில் சுற்றிக்கொண்டே கண்ணாடியைப் பார்த்தபோது அம்மா பின்னால் வந்துநிற்பது கண்ணாடியில் தெரிந்தது. அம்மாவின் முகத்தில் அப்பியிருந்த சோகமும் புடவைத்தலைப்பின் நுனியால் நெற்றியையும் கண்களையும் ஒற்றுயெடுப்பதையும் பார்த்தபோது பத்மினிக்கு அம்மா எதற்காக வந்து நிற்கிறாள் என்ன சொல்லப் போகிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது.இப்படி ஆபீஸ் கிளம்பும் போது கடைசிநேரத்தில் அம்மா தவிப்போடு வந்துநிற்பது ஒன்றும் புதிதல்ல மூன்று முறைக்கு மேலாய் பார்த்தாயிற்று..அழாத குறையாய் தொண்டைஅடைக்க பேசுவதையும் கேட்டாயிற்று.கணக்கு வைத்துப் பார்த்தால் இது நான்காவது முறை.என்னம்மா என்று கேட்கவே பிடிக்கவில்லை. கேட்டுவிட்டால் போதும் பிலாக்கணம் பாட ஆரம்பித்துவிடுவாள். ம்கூம்..அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என்று நினைத்தவளாய் ஹேண்ட்பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு சுவற்றோரம் இருந்த டஸ்ட்பின்னில் விரலில் சுற்றியிருந்த முடிச்சுருளை உருவிப் போட்டுவிட்டு வாஷ் பேசினில் கைகளை அலம்பிக் கொண்டு சுவரில் தொங்கிய தினசரிகாலண்டரில் இருந்த முருகனின் கால்களைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டுவிட்டு வாசலைநோக்கி நடந்தாள் பத்மினி.

குனிந்து கட்ஷுவை காலில் அட்ஜஸ் செய்து மாட்டும்போது அம்மாவந்து நின்றாள்.இப்போது அப்பாவும் முகமெங்கும் வருத்தமாய் அம்மாவின் பின்னால்.

பத்மினி.. இந்த ஒருமுறை.. ஒரே ஒருமுறை முயன்று பாப்பமே..

அம்மா..குனிந்தநிலையிலிருந்து முகத்தை நிமிர்த்தி அம்மாவின் முகம் பார்த்துக் கத்தினாள்.

என்னை மனுஷப் பிறவின்னு நெனச்சியா..இல்ல.. இதயம்னு.. மனசுன்னு எந்த ஒன்னுமே இல்லாத பொம்மைன்னு நெனச்சியா..நா என்ன உணர்சிகளற்ற ஜடமா..நீ எதப்பத்தி பேச எங்கிட்ட வந்தியோ அதப்பத்திப் பேச இனிமே எந்த காலத்திலும் நா ரெடியில்ல.. விருட்டென எழுந்து வாசல் கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

பத்மினி..பத்தும்மா..அப்பாவின் தழுதழுத்த குரல்.

கேட்டைத் திறந்து கால்களைத் தெருவில் வைத்துத் திரும்பி கேட்டைச் சாத்தும்போது அப்பா..உங்களுக்கும் அம்மாவுக்குச் சொன்ன பதில்தான்..சொல்லிவிட்டு பஸ்நிறுத்தம் நோக்கி நடக்கத் தொடங்கினாள் பத்மினி.

கைகடிகாராத்தில் நேரம் பார்த்த போது ஏழரை ஆக இரண்டு நிமிடமே இருப்பதைக் காட்டியது கடிகார முட்கள்.

கையிலிருந்த செல்லுக்கு உயிர் கொடுத்து ஹைலோ.. அனிதா.. குட்மார்னிங்..என்றாள்.

ஹாய்..வெரிகுட்மார்னிங் பத்மினி.. சொல்லுங்க..

cab வந்தாச்சா..

அதோ வந்துகிட்ருக்கு..

ப்ளீஸ்..ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணச் சொல்லுங்களேன்.. கொஞ்சம் லேட்டாயிடுத்து.. கிட்டத்துல வந்துட்டேன்.

ஓகே..நோ..ப்ராப்ளம்..

தேங்யூ..அனிதா..

வெல்கம்..

செல்லை ஆஃப் செய்து ஹேண்ட் பேக்கில் போட்டுக்கொண்டு நடையின் வேகத்தை அதிகப் படுத்தினாள் பத்மினி.

cab க்குள் இருந்தவர்கள் செல்லோடு தொடர்பு கொண்டிருந்த ear phone னைக் காதுகளில் மாட்டியபடி அவரவர்கள் விரும்பும் நிகழ்ச்சி களைக் காதால் கேட்டபடி கண்களைமூடி ரஸித்தபடி இருக்க..

cabன் கதவோரம் அமர்ந்து பின்புறம் தலைசாய்த்து கடந்தகால கசப்பான நினைவுகளில் மூழ்கிப்போனாள் பத்மினி.

அம்மா..அம்மா..நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணிட்டேம்மா..பாஸ் பண்ணிட்டேன்..கையில் பரிட்ச்சை ரிசல்ட் வெளியாகியிருந்த மாலைவெளியாகும் அந்த தினசரி பத்திரிக்கையோடு உள்ளே ஓடிவந்த பத்மினி அம்மாவை சந்தோஷ மிகுதியால் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

கண்ணே..என்செல்லமே.. மகளின் உச்சிமுகர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பத்மினியின் தாய் ஈஸ்வரியின் கண்களில் கண்ணீர் அருவியெனப் பெருக்கெடுத்தது.

Representational Image

அம்மா அப்பாக்கு சொல்லணுமேம்மா ஆமாங்கண்ணு அப்பாக்கு இன்னிக்கு ஒனக்கு ரிசல்ட் வருதுன்னு தெரியும் என்னாச் சோன்னு தவியா தவிச்சிண்ருப்பா..

என்னதா படிப்புல மகா கெட்டிக்காராளா இருந்தாலும் ரிசல்ட்டுன்னு வரச்சே கொஞ்சம் பயமாத்தானே இருக்கும்..நீ நன்னா படிக்கிற பொண்ணுன்னாலும் பரீட்சேல பாஸ்னு காதுல வாங்கறவர கவலயாத்தானே இருக்கும்.அப்பா கவலயாதான் இருப்பா. இப்பன்னு பாத்து வடபழனில ஒரு கல்யாணம்..

சாம்புமாமா.. கல்யாணத்துக்கு சமைக்க அனுப்பின குரூப்போட அப்பாவையும் அனுப்சுட்டார். பொண்ணுக்கு ப்ளஸ்டூ ரிசல்ட்டு அதால நா இன்னிக்கு சமையல் வேலைக்குப் போலன்னு சொல்லிட முடியுமா..பாவம் அப்பா என்னாச்சோ ஏதாச்சோன்னு கவலப்பட்டுண்டு இருப்பா..தாய் ஈஸ்வரி சொல்லி முடிப்பதற்குள் மேஜைமீதிருந்த பட்டன் ஃபோன் சிணுங்கியது.

ஹலோ என்றாள் பத்மினி.. பத்துக்குட்டீ பாஸாயிட்டியா கண்ணு..அப்பாதான் கத்திக்கேட்டார்.

ஆமாம்ப்பா..நா பாஸ் பண்ணிட்டேம்ப் பா..

ரொம்ப சந்தோஷமா இருக்குடா செல்லம்..நாளைக்கு வரும்போது ஸ்வீட் வாங்கிண்டு வரேன். இன்னூத்தரோட ஃபோன வாங்கி பண்றேன் வெச்சுர்றேன்.

பத்மினி ப்ளஸ்டூ தேர்ச்சிபெற்றதை எளிமையாக அதேசமயம் சந்தோஷமாகவும் கொண்டாடியது அந்த ஏழைக்குடும்பம்.

தேசிய வங்கியில் கல்விக்கடன் வாங்கி MCA முடித்த பத்மினிக்கு வேலைக்காகக் காத்திருக்காமலே Infosys ஸில் வேலை கிடைத்தது. கைநிறைய சம்பளம்.சந்தோஷத்தில் மிதந்தது வீடு.

ஒரே ஒரு பட்டன் ஃபோனோடு காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த வீட்டில் மூவர்க்கும் ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோன் வந்தது.சிங்கிள் டோர் சின்ன ஃப்ரிட்ஜ்.. டபுள் டோர் ஃப்ரிட்ஜானது.பழைய காஸ் அடுப்பு க்ளாஸ்டாப்புக்கு மாறியது. வாஷிங்மெஷினே இல்லாமலிருந்த நிலைமாறி பெரிய சைஸ் ஃப்ரென்ட் ஓபன் மெஷின் வந்தது.குட்டி சைஸ் டிவி போய் சுவற்றில் மெகாசைஸ் டிவி இடம் பிடித்தது.வருடம் இரண்டு டிரஸ்தான் என்பது போய் நினைக்கும் போதெல்லாம் துணிமணிகள் வாங்கப்பட்டன. அம்மா ஈஸ்வரியின் கழுத்தில் கவரிங் செயின் விடைபெற்றுப்போய் தங்கச்சங்கிலி புரள ஆரம்பித்தது.

அப்பா தியாகராஜன் சமையல் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு வெள்ளையும் சள்ளையுமாய் கெத்தாய் அலைய ஆரம்பித்தார்.

தியாகராஜனும் ஈஸ்வரியும் நினைத்துக்கூடப் பார்க்காத வசதியான சொகுசான வாழ்க்கைக்கு மாறினார்கள் பத்மினியின் வருமானத்தில்..இனி அவர்களால் சாதாரண வாழ்க்கைக்கு மாறமுடியுமா என்பது சந்தேகமே.

வாடகைவீடு மாறி சொந்த ஃப்ளாட்டுக்கு பத்மினி குடும்பம் குடிபெயர்ந்தபோது பத்மினி இருபத்தைந்தாம் வயதில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

அப்போதுதான் அவளைத்தேடி வந்தது காதல்.

Representational Image

அறையில் லைட்டைக்கூடப் போடாமல் இருட்டில் அமர்ந்திருந்தாள் பத்மினி.ச்சே.. எப்படியான மனிதர்கள் இவர்கள்?.. எப்பேர்பட்ட பத்தாம்பசலிகள்?.யார் சாவுக்கு யார் காரணமாகமுடியும்?..

கல்யாணத்திற்கு முன்னாடியே இப்படியென்றால் கல்யாணமாகி மருமகளாய் வந்தபிறகு வீட்டில் சாதாரண அசம்பாவிதங்கள் நடந்தால்கூட எப்படியெல்லாம் ஏசுவார்கள் பேசுவார்கள்.. படித்தகுடும்பமாம்..பெரிய மனிதர்களாம்..ச்சே..பெரியவர்கள்தான் இப்படியென்றால் இந்த விதேஷும் இப்படி பழைய பஞ்சாங்கமாய்..படித்த முட்டாளாய்.. மனது கசந்து போனது.ஃபோன் பண்ணி அவனை நறுக்கென்று நாலு கேள்விகேட்டு கிழிக்க வேண்டும் போல் இருந்தது.ஃபோன் செய்தாலும் அவன் எடுக்கப் போவதில்லை. விடு..கழிசடைகள்..விதேஷை மனதிலிருந்து துடைத்தெரிய முயன்றாள்.

அடுத்து வந்த ஆறுமாதங்கள் அவள் மனதை ஆறுதல் படுத்தியிருந்தது.

அதன் பின்னர் அம்மா அப்பாவின் அழுகையும் கெஞ்சலும் மீண்டு மொரு பெண்பார்க்கும் படலம் நடக்க காரணமாயிற்று.இம்முறையும் இருவீட்டாருக்கும் பிடித்துப் போனாலும் நிச்சயம் செய்வது என்று பேசப்படாமலேயே நின்று போனது.

அடுத்த ஆறுமாதம் கழிந்து மூன்றாம் முறையாயும் நின்றுபோக இனி தனது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்று உறுதியாயும் இறுதியாயும் கூறிவிட்டாள் பத்மினி.

தனது முடிவில் உறுதியாய் இருந்த பத்மினியை காலையில் பெற்றோர் ஒவ்வொரு முறையும் பத்மினி அலுவலகம் கிளம்பும் நேரத்தில் கல்யாணப் பேச்சை தயக்கமும் வருத்தமும் அழுகையுமாய் எடுப்பதைப்போலவே எடுக்க முயல அதற்கு இடம் கொடுக்காமல் பொட்டிலறைந்தாற்போல் பதிலளித்துவிட்டு வெளியேறி விட்டாள் பத்மினி.

நாயொன்று குறுக்கே போக சடக்கென்று பிரேக் போட்டார் டிரைவர்.cab திடீரெனக் குலுங்கிய குலுங்கலில் முன்சீட்டில் தலைமுட்டிக்கொள்ள நிகழ்வுக்கு வந்தாள் பத்மினி.

அலுவலகம்.வேலையே ஓடவில்லை பத்மினிக்கு.தலையை வலிப்பது போல் இருந்தது.காலையில் தன் முகம் பார்த்து அழுத தாயின் முகமும் தந்தையின் வருத்தமான முகமும் அடிக்கடி மனதில் வந்துபோனது. பாவம் அம்மாவும் அப்பாவும் தங்களது பெண்ணுக்கு அதுவும் ஒரே ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் காட்சியென்று மாலையும் கழுத்துமாய்ப் பார்க்க ஆசை இருக்காதா?..பெண்ணும் மாப்பிள்ளையுமாய் தங்களின் காலில் விழுந்து நமஸ்கரிக்க வாயார வாழ்த்த எவ்வளவு ஆசையிருக்கும்.மகளின் குழந்தைகள் தங்களைப் பாட்டி தாத்தாவென அழைப்பதைக் காது குளிரக்கேட்க ஆசை இருக்காதா?இவை எதுவுமே நடக்காமல் தங்கள் ஆசைகள் நிராசையாகப் போவதை

எந்த பெற்றோரால்தான் தாங்கமுடியும்? பாவம் அம்மா பாவம் அப்பா என்று மனம் தவிக்க கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அதற்குமேல் அலுவலத்தில் இருக்கப்பிடிக்காமல் அரைநாள் லீவு போட்டுவிட்டு அலுவலகம் விட்டு வெளியேவந்தாள்.

சிந்தனையை வேறு எதிலாவது செலுத்தினால் தேவலாம்போல் இருந்தது பத்மினிக்கு.புதிதாய் சுடிதார் ஜீன்ஸ் டீஷர்ட் உள்ளாடைகள் எதுவும் வாங்கலாமெனத்தோன்ற ஆட்டோவில் ஏறி பிரபலமான அந்த ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள்.

தேவையானவற்றை செலக்ட் செய்துவிட்டு அவற்றிற்கான பணத்தைச் செலுத்த அதற்குரிய பில்லோடு கவுன்ட்டரின் முன் வந்து நின்றாள்.முன்னால் இரண்டு மூன்றுபேர் நிற்க தனக்கான முறைக்காக காத்துநின்றபோது.. பின்புறம் மா..மா..ம்மா..என்ற குழந்தையின் குரலும் தனது சுடிதாரைப்பிடித்திழுக்கும் சின்னஞ்சிறு கைகளின் தொடலும் உணரப்பட..சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் பத்மினி.

ஒன்னரை வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்குழந்தைக்கு.

இவள் திரும்பிப் பார்த்ததும் ம்மா..ம்மா..என்றபடி இருகைகளையும் விரித்து என்னைத் தூக்கிக்கோ என்பதுபோல் சிணுங்கி அழஆரம்பித்தது.குழம்பிப்போனாள் பத்மினி.

இதென்னயிது?கொழந்தைக்கு அம்மாவக்கூடவா அடையாளம் தெரியாது..என்னப்போயி அம்மான்னு நெனச்சு தூக்கிக்கச் சொல்றது..இந்தக் கொழந்தையோட அம்மா துணிவாங்கற மும்முரத்துல கொழந்தைய கவனிக்காம விட்ருப்பாங்களோ?அதான் இது அம்மாவ விட்டுப் பிரிஞ்சு வந்துருக்குமோ..?பலவாறு நினைத்துக் குழம்பியவளை கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு அழுகையை அதிகப்படுத்தித் தூக்கிக் கொள்ளச்சொன்னது அந்தப் பெண்குழந்தை.செய்வதறியாது தவித்துப்போய் வேறு வழியின்றி குழந்தையைத் தூக்கிக் கொண்ட

பத்மினியின் பார்வை குழந்தையின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் நிலைத்தது.

குழந்தையின் பெயர் ப்ரக்யா என்பதும்.. தந்தை பெயர் சிவதர்ஷன் என்பதும் வீட்டுமுகவரியும் செல்நம்பரும் மனதில் பதிந்தன.

குழந்தையைத்தூக்கிக்கொண்ட பத்மினிக்கு பயமாயிருந்தது. ஏதாவது பிரர்ச்சனை வந்து தான் குழந்தையைக் கடத்த வந்தவளாய் பழிவந்துவிடுமோ என்று தவிப்பாய் இருந்தது.

குழந்தை ப்ரக்யா பத்மினியின் கழுத்தைக்கட்டிக்கொண்டது. கன்னத்தில் முத்தமிட்டது. ம்மா..ம்மா என்றது.

அப்போது ப்ரக்யா.. ப்ரக்யா என்று அழைத்துக்கொண்டு பதை பதைப்போடு இங்குமங்கும் தேடியபடி

ஓடிவந்தான் ஓர் இளைஞன்.

ப்பா..என்று கத்தியபடி பத்மினியின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்த குழந்தை ப்ரக்யா சற்றே கழுத்தைத் திருப்பிப் பார்த்தது.

Representational Image

ப்ரக்யா.. நீ இங்கயா இருக்க..ஒன்ன எங்கெல்லாம் தேடுறது.. கத்திக் கொண்டே பத்மினியின் அருகில் ஓடிவந்தவனை சற்றே திரும்பிப் பார்த்தாள் பத்மினி.

ஒரே நேரத்தில் இருவரும் அதிர்ந்து போனார்கள்.

நீ..நீ..நீங்களா என்றான் ப்ரக்யாவை தேடிக்கொண்டு வந்தவன் அதிர்ச்சியோடு பத்மினியைப் பார்த்து.

நீ..நீ..நீங்களா என்றாள் பத்மினி..தன்னோடு Infosy ஸில் வேலைபார்த்தவன்..தன் காதலைச்சொன்னவன்..தர்ஷன்..

ஆமா..நா..ப்ரக்யாவோட ஃபாதர் சிவதர்ஷன்.ப்ரக்யா என்னோட பொண்ணுதா..

ப்ரக்யாக்கு நாளைக்கி பர்த்டே..அவளுக்கு ட்ரெஸ் வாங்க வந்தேன்.பில்லுக்கு பணம் தர்ர நேரத்துல ஓடிவந்துட்டா..ஸாரி..ஸாரி

ஒங்களுக்கு ரொம்ப தொந்தரவு தந்துட்டாளா..தன்னோட அம்மா சாயல்ல யாரையாவது பாத்துட்டா இப்பிடிதான் அவங்ககிட்ட ஓடிர்றா..தன்ன தூக்கிக்கும்படி அழுவா..அவங்களவிட்டு வரவேமாட்டேம்பா..ஒங்களையும் பாடாபடுத்திருப்பாளே..ஸாரி ஸாரி பத்மினி மேடம் என்றான்.மிஸ் என்பதா மிஸஸ் என்பதா என்று அவன் தடுமாறியது தெரிந்தது.

ஓ..நோ..நோ..ப்ரக்யா தொந்தரவு எதுவும் செய்யல..

ப்ரக்யா..அப்பாட்ட வா..கைநீட்டினான்.

ம்..ம்..மாத்தேன்..

ஒங்க மிஸஸ்..அதான் ப்ரக்யா அம்மா வல்ல..
சட்டென முகம் மாறிப்போனான் தர்ஷன்..எம் மனைவி இப்ப இல்ல..அவங்க காலமாகி மூணு மாசமாயிடுத்து..நாலு நாள் ஜுரத்துல என்னையும் ப்ரக்யாவயும் அனாதையாக்கிட்டுப் போய்ட்டாங்க..குரல் உடைந்து அழுதுவிடுவான் போலிருந்தது.

ஐயோ..என்று கொஞ்சம் சப்தமாகவே கத்திவிட்டாள் பத்மினி..ஸாரி ஸாரி ஒங்க வேதனைய கிளறி விட்டுட்டேன்.

ப்ச்..ஒன்னேகால் வயசுவர அம்மா முகத்தப்பாத்து அவ அணைப்புல இருந்துட்டதால ப்ரக்யாவால அம்மா இல்லாம இருக்க முடியல..அதான் தன்னோட அம்மா போல உருவ ஒத்தும இருக்குற எந்தப் பெண்ணப்பாத்தாலும் அம்மா அம்மான்னு அழறா..அவங்ககிட்டா ஓடிப்போயிடறா..அதான் ஒங்களப் பாத்ததும் ஒங்ககிட்ட ஓடிவந்துட்டா.

மௌனமாய் நின்றாள் பத்மினி.

ப்ரக்யா வா வீட்டுக்குப் போலாம்.. கைநீட்டி அழைத்தான். வரமறுக்கவே வலுக்கட்டாயமாய் இழுத்துத் தூக்கிக்கொண்டான்.. ஒங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு ஸாரி..வரேன் என்று சொல்லிவிட்டு ப்ரக்யா மா..ம்மா என்று பத்மினியை நோக்கிக் கைநீட்டி அழஅழ குழந்தையைச் சமாதானம் செய்துகொண்டே வேகவேகமாய் நடந்து சென்றான்.

மனம் பாராங்கல்லாய் கனத்தது.பாவம் ப்ரக்யா..பாவம் தர்ஷன் என்று நினைத்தவாரே பில்லுக்கான பணத்தை கிரடிட் கார்டுமூலம் செலுத்திவிட்டு கடையைவிட்டு வெளியே வந்து ஆட்டோவில் ஏறி வீடுநோக்கிச் சென்றவள் மனம் முழுதையும் ப்ரக்யா நினைவே ஆக்ரமித்தது.

ஆட்டோவுக்குப் பணம் கொடுத்து விட்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முகப்பு கேட்டைக் கடந்து சென்று லிஃப்டில் ஏறி தனது குடியிருப்பின் floor எண்ணை அழுத்த கண்ணிமைக்கும் நேரத்தில் வாசல் கதவின் முன் வந்து நின்றவளை உள்ளேயிருந்து வந்த பெற்றோர்களின் சிரிப்பொலி வரவேற்றது.காலிங்பெல்லை அழுத்தாமல் தயங்கி நின்றாள் பத்மினி.

என்ன இது..நம்ம அம்மாவும் அப்பாவுமா இப்பிடி சிரிக்கிறா..இந்த வீட்ல சிரிப்பொலிகேட்டே ரொம்ப நாளாச்சே..காலேலகூட அம்மா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னு என் சம்மதம்கேட்டு அழுதகண்ணும் சிந்தியமூக்குமா நின்னா..அப்பாவும்

எவ்வளவு வருத்தமா என்னையே பாத்துண்டு இருந்தா..ஆனா இப்ப இந்தமாதிரி வாய்விட்டு சிரிக்கிற அளவுக்கு அப்பிடியென்ன சந்தோஷ

சமாச்சாரம் நடந்திருக்கும் என்று குழம்பியவளை மேற்கொண்டு தாயும் தந்தையும் பேசிக்கொண்ட பேச்சு நிலைகுலைய வைத்தது.

ஏய்..ஈஸு..என் அழகான பொண்டாட்டியே..இப்ப ஒனக்கு எத்தன வயசாறுது சொல்லேன்..

ஏன்..என்னமோ ஒங்குளுக்குத் தெரியாதமாறின்னா கேக்கறேள்..அம்பத்ரெண்டு..

அம்பத்ரெண்டா..போடி இவளே..பாத்தா முப்பத்ரெண்டு வயசாட்டம் கிண்ணுனு இருக்க..

போறுமே..நம்ம பொண்ணுக்கே இருவாத்தெட்டு வயசாச்சு..

ஆனாலும் நீ இன்னும் எங்கண்ணுக்கு அழகா எளமையா தாண்டி ஈஸு தெரியற..

நீங்க மட்டும் என்னவாம் ஒங்களாப்பாத்தா அம்பெத்தெட்டு வயசுன்னு யாராவது சொல்லுவாளா..மீசைக்கும் தலைமுடிக்கும் டைஅடிச்சுண்டு வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையோட..கழுத்துல தங்கச்செயின்வேற ..சமயத்துல கூலிங்கிளாஸ மாட்டிண்டு நீங்க டூவீலர்ல ஏறி ஸ்டார்ட் பண்ணறச்சே சினிமா ஹீரோமாறின்னா இருப்பேள்.முப்பத்தெட்டு வயசுக்குமேல சொல்லுவாளா யாராவது..

ஹோ..ஹோ..ஹோ..ஹோ இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

நாம வாழற இந்த வசதியும் மகிழ்ச்சியுமான வாழ்க்கைக்கு நீதாண்டி ஈஸ்வரி காரணம்.

போங்கோன்னா..ஒங்க ஒதவி இல்லேன்னா நாமட்டுமா இதெல்லாம் செய்யமுடியுமா என்ன..

பின்ன..பத்மினிக்கு மட்டும் கல்யாணமாயிடுத்துன்னா நம்மளோட இந்த வசதியும் சந்தோஷமும் தொடர்ந்து நீடிக்குமா என்ன?..

அதெப்பிடி நீடிக்கும்?..

அவுளுக்குக் கல்யாணமாயிடுத் துன்னா அதுக்கு அடுத்த மாசத்துலேந்தே அவளோட சம்பளம்

அவ புருஷங்கைக்குப்போயிடும்.

ஏதோ நம்மமேல பாவப்பட்டு ஐயாயிரமோ ஆறாயிரமோ அவ புருஷன் குடுப்பான்.அவாளுக்குன்னு ஒரு கொழந்த பொறந்துட்டா அதுவும் இல்லேன்னு ஆயிடும்.அப்பறம் நம்மகதி.. நீங்க பழையபடி கல்யாணங்களுக்கு சமைக்கப் போணும்.நா தெவசம்திங்கள்ன்னு யாராத்துலயாவது ஒத்தாசைக்குக் கூப்டா போகணும்.அய்யோ நெனச்சுப் பாக்கவே பயமாருக்கு..இனிமே இந்த வசதியான வாழ்க்கைலேந்து எதுக்காகவும் மாறமுடியாது..

Representational Image

சரியாச்சொன்ன ஈஸ்வரி.. அதுனாலதானே..பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடக்கூடாதுன்னு சர்வஜாக்கிரதையா தகிடுதத்தம் செய்யிறோம்.

ஆமான்னா..நமக்குக் கல்யாணாம் பண்ணணும்னு அம்மாவும் அப்பாவும் என்னபாடுபடறான்னு பத்மினி நம்பணும்..அதேசமயம் கல்யாணம் ஆகிடக்கூடாதுன்னு என்னவெல்லாம் செய்யிறோம்.

அதுவும்..மொதல்ல பொண்ணு பாக்கவந்தானே..அவ யாரு..விதேஷ்..

விதேஷ் அந்த வரன வேண்டாம்னு சொல்லி நிச்சயதார்த்தத்த நிறுத்த என்னபாடு பட்டோம்.அவா குடும்பத்தபத்தி மொட்டக்கடிதாசு வந்ததா பொய்யான லெட்டர அவாட்டகாட்டி அவாள மெரட்டி.. அப்பப்பா..போதும்போதும்னு ஆயிடுத்துல்ல..அடுத்தடுத்து வந்ததையெல்லாம் பொண்ணுக்குப் பிடித்தமில்லன்னு காரணம் சொல்லிக் கழட்டி விட்டுட்டோம்.நீ பெரிய ஆளுடி ஈஸ்வரி..

நீங்மட்டும் என்னவாம்?நீங்களும்தான்..

இன்னிக்கும் காலேல பாரேன்.. மறுபடியும் கல்யாண ஏற்பாடுக்கு முயல்றவமாதிரி..கண்ணீரும் கம்பலையுமா பத்மினிட்ட நடிக்கிற..அவுளும்னா நம்பிட்டா..

நாமட்டுமா நடிச்சே..நீங்க என்னமா வருத்தமா மூஞ்சிய வச்சுண்டு..

கைதட்டிச் சிரித்தார்கள் இருவரும்.

வெளியே நின்ற பத்மினியின் செவிகளில் அவளைப் பெற்றவர்களின் பேச்சு ஸ்பஷ்டமாக விழுந்தது. இதயம் சில்லுசில்லாய் சிதறிவிடும்போல் துடித்தது.அய்யோ என்று வாய்விட்டுச் சப்தமாய் கத்தவேண்டும்போல் இருந்தது பத்மினிக்கு..தான் பெற்ற பெண்ணுக்கு இப்படிக்கூட துரோகம் செய்வார்களா பெற்றவர்கள்.. இதென்னகொடுமை?உடல் நடுங்கியது..கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் இறங்கியது..வேதனை தாங்காமல் வெடித்துவந்த விம்மலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் பத்மினி.சட்டென மீண்டும் லிஃப்டில் ஏறி கீழே இறங்கினாள்.மனம் பெற்றவர்களின் துரோகத்தை எண்ணிஎண்ணித் தவியாய்த் தவித்தது..ச்சே..தாயாலும் தந்தையாலுமே எப்படி ஏமாற்றப் பட்டிருக்கிறோம். பெற்றவர்களால் ஏமாற்றப்பட்ட துரோகம் செய்யப்பட்ட மகனோ மகளோ உலகத்தில் தன்னைத்தவிற வேறுயாராவது இருப்பார்களா? சட்டென மனதின் வேதனையும் வருத்தமும் வன்மமாய் மாறியது பத்மினியின் மனதில்.

எதிரிகளைக்கூட மன்னிக்கலாம்..

துரோகிகளை மன்னிக்கவே கூடாது

அது பெற்றவர்களேயானாலும் என்று தோன்றியது.

கடந்துசென்ற ஆட்டோவைக் கைதட்டி அழைத்தாள்.ஏறி அமர்ந்தவளை எங்க மேடம் போகனும் என்று கேட்ட டிரைவரின் கேள்வி கண்மூடி கண் திறக்கும் நேரமே சிந்திக்க வைத்தது.

கண்களைமூடித் திறந்தவளின் மனதில் ப்ரக்யாவின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் தான் படித்த முகவரி சட்டென நினைவில் வர..மிகச்சரியாய் டிரைவரிடம் அதை ஒப்பித்தாள்.

அந்தத் தனி வீட்டின் மெயின் டோருக்கு முன் வந்து நின்றபோது பத்மினியின் மனது ஏதோ ஒரு முடிவில் உறுதிப்பட்டிருந்தது.காலிங் பெல்லை அழுத்தினாள் பத்மினி.

வரேன் என்று குரல் கொடுத்தபடியே வந்து கதவைத் திறந்த தர்ஷன் பத்மினியைப் பார்த்து அப்படியே அதிர்ந்து போனான்.

நீ..நீ..நீங்களா..என்றவன் நினைத்துக்கூடப் பார்க்காத பத்மினியின் வரவால் அதிர்ச்சியில் உறைந்தேபோய் அவளை வாங்கவென்று அழைக்கக்கூடத் தோன்றாமல் அப்படியே நின்றான்.

உள்ள வரலாமா மிஸ்டர் தர்ஷன்..

ஸாரி..ஸாரி..வாங்க..வாங்க என்றான் கொஞ்சம் இயல்புக்கு வந்தவனாய்.

தன்னை நிதானப் படுத்திக் கொண்டு நினைவாய் வலதுகாலை முதலில் உள்ளே வைத்து வீட்டுக்குள் நுழைந்தாள் பத்மினி.

சுற்றிலும் விளையாட்டு பொம்மைகள் சிதறிக் கிடக்க நடுவில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த ப்ரக்யா பத்மினியைப் பார்த்துவிட்டு சடாரென எழுந்து கையிலிருந்த பொம்யைக் கீழே போட்டுவிட்டு மா..மா..மம்மா என்று கத்திக்கொண்டே இருகைகளையும் விரித்தபடி ஒடிவந்தது.முகமெங்கும் சந்தோஷம்.

தன்னைநோக்கி ஓடிவந்த ப்ரக்யாவை வாரித் தூக்கிக் கொண்டாள் பத்மினி.

பத்மினிக்கும் ப்ரக்யாவுக்குமிடையே நடந்த இந்தசெயலை வியப்போடு பார்த்தபடி நின்றிருந்தான் தர்ஷன்.

ம்மா..ம்மா.. என்றபடி பத்மினியின்

கழுத்தைக் கட்டிக்கொண்ட ப்ரக்யாவை மார்போடு இறுக அணைத்துக்கொண்டாள் பத்மினி.

ப்ரக்யா..ப்ரக்யா கண்ணூ..என்னை ம்மா..ம்மான்னு கூப்டறியே செல்லம் ஒன்னோட அப்பாமட்டும் சம்மதம் குடுத்தா இதோஇதோ இன்னிக்கே இப்பவே ஒன்னோட நிரந்தர அம்மாவா மாற நான் தயாரா இருக்கேன் ப்ரக்யா கண்ணு.. என்றாள் தழுதழுத்த குரலில்.

மிஸ்.பத்மினீ என்னயிது? என்ன சொல்றீங்க?கத்திவிட்டான் தர்ஷன்.

ஆமா..தர்ஷன்..உண்மையாதான் சொல்றேன்..என்னை உங்க மனைவியா..ப்ரக்யாவின் தாயா ஏத்துப்பீங்களா?

அதிர்ந்தே போனான் தர்ஷன்.என்ன சொல்றீங்க பத்மினி..

நிஜம்தான் சொல்றேன் தர்ஷன்.. உறுதியாகவும் முடிவாகவும் சொல்றேன்..என்னை நம்புங்க தர்ஷன்.

உங்க அப்பா.. அம்மா..

வேண்டாம்..அவங்களப்பத்தி தயவுசெய்து பேசாதீங்க..எதிரிங்கள மன்னிக்கலாம்..ஆனா துரோகிங்கள?

அவங்க துரோகிங்க..விசும்பினாள் பத்மினி.

சொல்லுங்க தர்ஷன்..என்னை ஒங்கமனைவியா ப்ரக்யாவின் தாயா ஏத்துப்பீங்களா தர்ஷன்.

மெல்ல பத்மினியை நோக்கி நடந்து வந்த தர்ஷன் ப்ரக்யாவை மார்போடு அணைத்தபடி கண்ணீர்மல்க நிற்கும் பத்மினியை ப்ரக்யாவோடு சேர்த்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.