'தேவேந்திர பட்னவிசுக்கு ரொம்ப பெரிய மனசு!' – ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சி!

தன்னை முதலமைச்சராக அறிவித்த தேவேந்திர பட்னவிசுக்கு சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே நன்றி தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று விலகினார். தனது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே இந்த அதிரடி முடிவை எடுத்தார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சியான பாஜகவுக்கு ஆதரவு அளித்தார். பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இன்று, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர், ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னவிஸ், மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என அறிவித்தார். முதலமைச்சராக தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அதிரடி திருப்பமாக மாறியது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:

எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், தேவேந்திர பட்னவிஸ் தான் முதலமைச்சர் ஆக வேண்டும். ஆனால் அதைப் பற்றி எதையும் கவலைப்படாமல் எனக்கு அந்த பதவியை விட்டுக் கொடுத்துள்ளார். இது அவருடைய பெரிய மனதைக் காட்டுகிறது. 120 எம்எல்ஏக்களைக் கொண்ட ஒருவர், பஞ்சாயத்து அல்லது குடிமைத் தலைவர் பதவியைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டார். ஆனால் தேவேந்திர பட்னவிஸ் பெரிய காரியம் செய்துள்ளார். அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன்.

பால் தாக்கரேவின் சிவசேனா தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனக்கு அதிகாரம் அல்லது பதவி மீது ஆசை இல்லை. மாநில மக்களின் நலன் மீது அதிக அக்கறை கொண்டுள்ளேன். அதற்காக இந்த முடிவை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.