புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், பாஜ கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, மொத்தம் 18 அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் நாளில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும். ஜூலை 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெறுபவர், ஜூலை 25ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடக்கும் விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்பார். துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடக்கிறது. கடைசி தொடர்: நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் கடைசியாக நடக்கும் கூட்டமாக மழைக்கால தொடர் இருக்கும் என்று கருதப்படுகிறது.