“நாடு முழுவதும் தோற்கவுள்ள பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வெற்றி பெறும்?'' – கே.பாலகிருஷ்ணன்

மதுரையில் தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “மோடி அரசு பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கின்றது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக உரிமை மிதிக்கப்படுகிறது.

கே.பாலகிருஷ்ணன்

உள்நாட்டில் நடப்பதை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் ஜனநாயகம் இல்லை என பேசிவருகிறார்.

ஜனநாயகத்திற்காக குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை தொடர்ந்து கைது செய்யும் அவலம் தொடர்கிறது. அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன்

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது, இதுபோன்று குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, பழைய பென்சன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நிரப்புவது வேதனை அளிக்கிறது. அதுபோல் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றவரிடம் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்னைப் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஒற்றைத் தலைமை குறித்து சண்டைபோடும் அ.தி.மு.கவினர் மோடி அரசின் கீழ் நடைபெறும் மக்கள் விரோத திட்டங்களை ஏன் எதிர்த்து பேசுவதில்லை? பா.ஜ.க.வின் மக்கள் விரோத திட்டங்களை வெண்சாமரம் வீசி வரவேற்கின்றனர்” என்றார்.

கே.பாலகிருஷ்ணன்

“அண்ணாமலை பேசி வருகின்ற பா.ஜ.க.வின் 8 ஆண்டு சாதனை என்பது தமிழக மக்களுக்கு வேதனைதான். ஆட்சியில் இருக்கப்போகும் இரு ஆண்டுகளில் இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க.-வுக்கு 25 சீட் கிடைக்கும் என்ற அண்ணாமலை பேசுவது பொய்யான நம்பிக்கை. பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்கு அடுத்தடுத்து தோல்விதான் கிடைக்கும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் தோற்கவுள்ள பா.ஜ.க தமிழகத்தில் மட்டும் எப்படி வெற்றி பெறும்?” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.