மதுரை: மதுரை மத்திய சிறையிலுள்ள பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி அமுதச்செல்வி பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 557 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். இவரை சிறைத் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
சமீப காலங்களாக தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனைக்கு உள்ளாகும் கைதிகளின் கல்வி விருப்பம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மத்திய சிறையிலும் விருப்பத்திற்கேற்ப, பள்ளிக்கல்வி, உயர் கல்வி கற்க தேவையான ஏற்பாடுகளை சிறைத் துறை நிர்வாகம் செய்கிறது. இதன்படி, அந்தந்த கல்வியாண்டில் நடக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்-2 தேர்வுகளை எழுதுகின்றனர்.
தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன்மூலம் தேர்ச்சி பெறுவோர், சிறை தண்டனை முடிந்து வெளியில் செல்லும்போது, பல்வேறு வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு உதவியாக இருக்கிறது என சிறைத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையிலுள்ள ஆயுள் தண்டனை பெண் கைதி ஒருவர், இவ்வாண்டு பிளஸ்-1 தேர்வில் சாதனை புரிந்துள்ளார் . 600-க்கு 557 மதிப் பெண்கள் எடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அழகர்புரம் அருகிலுள்ள திருமூலா என்ற ஊரைச் சேர்ந்தவர் அமுதச்செல்வி (40). இவர், வடசேரி காவல் நிலையத்திற்கு உட்பட எல்லையில் கடந்த 2010-ல் நடந்த கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய, அவருக்கு 2017-ல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2018-ல் மதுரை மத்திய சிறையிலுள்ள பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். ஏற்கெனவே 10-ம் வகுப்பு முடித்து இருந்த அவர், 11-ம் வகுப்பு தேர்வெழுத விரும்பினார். இது குறித்து சிறைத் துறை நிர்வாகத்திடம் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சிறை கைதிகளுக்கான கல்வி பயிற்சியில் அவரும் சேர்க்கப்பட்டார். பதினொறாம் வகுப்பிற்கான பாடங்களும் சிறைத் துறை ஆசிரியர்களால் அவருக்கு எடுக்கப்பட்டது. கடந்த மேமாதம் பள்ளிக் கல்வித் துறை நடத்திய பிளஸ்-1 தேர்வின்போது, மதுரை மத்திய சிறையிலுள்ள அமுதச்செல்வி உட்பட 16 ஆண் கைதிகளும் தேர்வெழுத்தினர். தேர்வு முடிவு அறிவிப்பில், அமுதச்செல்வி மற்றும் 15 ஆண் கைதிகளும் தேர்ச்சி பெற்றதும், ஒருவர் தோல்வியை அடைந்ததும் தெரியவந்தது.
இருப்பினும், யாருமே எதிர்பார்க்காத வகையில் அமுதச்செல்வி 600க்கு -557 மதிப்பெண்கள் சாதித்தார். 5 பாடங்களில் 90க்கும் மேலும், ஒரு பாடத்தில் மட்டும் 84 மதிப்பெண்களும் வாங்கியுள்ளார். இவருக்கு அடுத்து அருண் பெரியசாமி 538 மதிப்பெண்களும், சிவபாலகர் 508 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அமுதச்செல்வியின் சாதனை பிற சிறைவாசிகளை பிரமிக்கச் செய்துள்ளது என்றாலும், அவரது சாதனையை மத்திய சிறை டிஐஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் வசந்தக் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அவரது படிப்பு ஆர்வத்தை பாராட்டினர். மேலும், அவர் டிகிரி படிக்க விரும்பினால் அதுவும் நிறைவேற்றப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.