தஞ்சாவூர் மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் கழக மூத்த முன்னோடிகள் 603 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா கடந்த 27-ம் தேதி நடந்தது. உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அவர்களுக்குப் பொற்கிழி வழங்கினார். மூத்த முன்னோடிகள் அனைவரின் கைகளிலும் பூக்களைக் கொடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தூவி வரவேற்பு கொடுக்கவைத்திருக்கிறார்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள்.
“விழா யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களைவைத்தே உதயநிதிக்குப் பூக்களைத் தூவவைப்பதுதான் அவர்களை கௌரவிக்கும் அழகா?!” என்று சுயமரியாதையுள்ள பழைய தி.மு.க-வினரை முணுமுணுக்க வைத்திருக்கிறது இந்தச் சம்பவம். இந்தப் புதிய சர்ச்சை அறிவாலயம் வரையில் பேசுபொருளாகியிருக்கிறதாம்.
‘கோபுர’ நகரில் அ.தி.மு.க இளைஞர் அணி நிர்வாகியாக இருக்கும் சினிமா ஃபைனான்ஸியர், பணிவானவரின் ‘அன்பு’க்கு உரியவர். அவரைத் துணிவானவரின் பக்கமிழுக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், முன்னாள் அமைச்சர் ஒருவர். “சொந்தச் சமூகத்தவருக்கு எதிரா எப்படிங்க..?” என்று அவர் இழுத்திருக்கிறார். “நானும்தான் அந்தச் சமூகம்… அதிகாரம் வேணும்னா துணிவானவர் பக்கம் வாங்க…” என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர். `அதுவும் சரிதான்’ என்று மடங்கிவிட்டாராம் அன்பானவர். இருந்தாலும், தி.மு.க குடும்பத்தில் சம்பந்தம் செய்திருப்பதாலும், தொழில்ரீதியாக வாரிசுடன் கைகோத்திருப்பதாலும், `இந்த முடிவு சரியா?’ என்று தெரியாமல் பரிதவிக்கிறாராம் அந்தத் திரைப்புள்ளி!
கழக மூத்த நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வந்திருந்தார், ‘சின்னவர்.’ அவரை எப்படியாவது அசத்திவிட வேண்டும் என்று நினைத்த உள்ளூர் அமைச்சர், விழாவுக்குச் செல்லும் ரூட்டையே தன் சொந்த கிராமம் வழியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார். ஜே.சி.பி வாகனங்கள், புல் வெட்டும் கருவிகள் உதவியுடன் ஊரையும், சாலையோரப் புதர்களையும் ஒரு வாரமாக அழகுபடுத்தியிருக்கிறார் அமைச்சர். இந்த வேலைக்காக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களையும் ஈடுபடுத்தியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு ஓரங்களிலும் கட்சிக்கொடிகள், பேனர்கள், ஆங்காங்கே மக்கள் கூட்டம் என்று பல லட்சம் செலவு செய்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த இடத்தை கிராஸ் செய்த சின்னவர், வரவேற்பைக் கண்டுகொள்ளவில்லையாம். “அதுகூடப் பரவாயில்லை… கார் கண்ணாடியைக்கூட இறக்காமல் போயிட்டாரே…” என்று வருத்தத்தில் இருக்கிறாராம் அமைச்சர்!
தலைநகரில் இருக்கும் போலீஸ் உயரதிகாரி ஒருவரை, யாரும் அவ்வளவு சீக்கிரம் சந்திக்கவே முடியாதாம். சாதாரண பொதுமக்கள் என்றால் இன்னும் கஷ்டம். ஆனால், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்றால், ஐயா உடனடியாக நேரம் ஒதுக்கிவிடுகிறார். “மக்களைச் சந்திக்க நேரமில்லாத அந்த பிஸி ஐ.பி.எஸ் அதிகாரியிடம் இவர்கள் மட்டும் எப்படி அப்பாயின்ட்மென்ட் வாங்குகிறார்கள்?” என்று விசாரித்தால், “அதற்கு ஒரு தனி ரூட்டே இருக்கிறது..!” என்கிறார்கள் காவலர்கள். பெரிய இடத்து மனிதரின் பெயரைப் பயன்படுத்தியே, குறுக்குவழியில் வி.வி.ஐ.பி-க்களும், நட்சத்திரப் பட்டாளங்களும் ஐயாவைச் சந்திக்கிறார்களாம்.
ஆட்சி மேலிடத்தில் இருக்கும் பெண்மணியின் நெருங்கிய உறவுக்காரர், ‘சேதி’ சொல்லும் துறையில் துணை இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார். சீனியாரிட்டியில் முன்னணியில் இருந்தும் அவருக்கு வரவேண்டிய பதவி உயர்வு இன்னும் வரவில்லையாம். ‘அ.தி.மு.க ஆட்சியில்தான் தரவில்லை.
நம்ம ஆட்சியிலும் வரவில்லையே என்று மேலிடத்து திருமதியிடமே முறையிட்டுவிட்டேன். அவங்க சொல்லியும் கிடைக்கலியே…’ என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் அதிகாரி.
குளுகுளு மாவட்டத்தில், புண்ணியத் தலத்தின் பெயரைக்கொண்ட ஆளுங்கட்சியின் நிர்வாகி ஒருவர், சொந்தக் கட்சி நகராட்சித் தலைவிக்கே போன் போட்டு இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார். கடுப்பான அந்த நகராட்சித் தலைவி, கட்சியின் மகளிரணித் தலைவியான கனிமொழியையே சந்தித்துக் கண்ணீர் வடித்திருக்கிறார்.
கடுப்பான அவர், மாவட்டச் செயலாளரை போனில் அழைத்து, “யாருங்க அந்த ஆளு… என்னங்க கட்சி நடத்துறீங்க?” என்று வெளுத்து வாங்கியிருக்கிறார். வெலவெலத்துப்போன மா.செ., “உடனடியா விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். தளபதிக்கு விஷயம் போக வேண்டாம் அம்மா” என்று கெஞ்சியதுடன், அந்த ‘ஆபாச’ நிர்வாகியை திட்டித் தீர்த்துவிட்டாராம். “இனி இப்படி நடக்காது” என்று சம்பந்தப்பட்ட நகராட்சித் தலைவியிடம் மன்னிப்புக் கேட்டு, தாஜா செய்துகொண்டிருக்கிறாராம் அந்த ‘ஆபாச’ நிர்வாகி.