புதுச்சேரி: தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் (ஜூலை 2) வருகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக- கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்எல்ஏக்கள், எம்பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன்படி பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வரும் ஜூலை 2ல் புதுவைக்கு வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் (ஜூலை 2) காலை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு திரவுபதி முர்மு வருகிறார். அவரை பாஜகவினர் வரவேற்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து ஹோட்டல் அக்கார்டுக்கு செல்கிறார். அங்கு பாஜக கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அங்கு நடைபெற உள்ள கூட்டத்திலும் ஆதரவு திரட்டி பேசுகிறார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் கூறுகையில், “வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரையும், கடந்த ஆட்சிக்காலத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் குடியரசுத் தலைவராக பாஜக தேர்வு செய்தது. தற்போது எளிய குடும்பத்தில் பிறந்த அரசியல் பின்புலம் இல்லாத திரவுபதி முர்மு பாஜக குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
எதிர்கட்சி அணியில் இருக்கும் பிஜூ ஜனதா தளம் உட்பட பல கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக நீதி பற்றி பேசும் திமுகவினர் தங்களை சந்திக்கவில்லை என துரைமுருகன் கூறியுள்ளார்.
மலைவாழ் சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்காததால் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை. நாடு சுதந்திரமடைந்த 75 ஆண்டில் முதல்முறையாக மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் குடியரசுத்தலைவர் வேட்பாளராகியுள்ளார். பாஜக வேட்பாளர் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு புதுவைக்கு வர உள்ளார்.
ஹோட்டல் அக்கார்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் திரவுபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். திரவுபதி முர்மு வருகை புதுவைக்கு வளர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.