தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. இன்னும் 150 போலீசார் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் `ஆர்டர்லி’ என்ற நடைமுறை ஆங்கிலேயேர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அந்தக் காலத்தில், போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆரம்பத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கார் ஓட்டுநராக இருப்பது, உதவியாளராக இருப்பது மட்டும்தான் ஆர்டர்லி வேலையாக இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டு வேலைகளை செய்யும் ஆட்களாக ஆர்டர்லிகள் மாற்றப்படனர். பின்னர், காவல்துறையில் எடுபிடி வேலை என்பதுதான் ஆர்டர்லி வேலை என்று பேசப்படுகிறது. உயரதிகாரிகளுக்கு துணி துவைப்பது, காய்கறிகள் வாங்கிக் கொடுப்பது, செல்லப் பிராணிகளை பராமரிப்பது, உயர் அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வது போன்றவை ஆர்டர்களின் வேலையாகிப் போனது. ஆனால், உயர் அதிகாரி, நம்பிக்கை, மரியாதை, பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு உறவைக் கட்டி எழுப்பவும் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரப்பூர்வமற்ற நிலையில், மூத்த தலைமையுடன் தொடர்புகொள்ளவும் ஆர்டர்லி முறை வாய்ப்பளிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனாலும், வீட்டு வேலைகளில் காவலர்களை பொருத்தமற்றது, கண்டிக்கத்தக்கது என்ற குரல்கள் எழுந்தன.
காவலர்களின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்தாகவும் உள்ளன.
இதனால், தமிழக காவல்துறையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க 1979 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இருப்பினும், இன்னும் ஆர்டர்லி முறை தொடர்வாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு வழக்கில், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலை செய்யும் ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலிய செய்ய வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டுதான் அவர் அந்த இடத்தை காலி செய்ததாகவும் அதன் காரணமாக அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் விசாரித்தது.
ஏற்கெனவே இந்த வழக்கில், தமிழகத்தில் ஆர்டர்லி முறையை நிறுத்துவது தொடர்பாக, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தமிழகத்தில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை செயலாலர் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்டர்லி முறை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆர்டர்லி முறையை வைத்திருக்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
காவலர் பயிற்சியை முடித்துவிட்டு 45,000 சம்பளம் வாங்கும் காவலரை உயர் அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டு வேலைக்கு பயன்படுத்துவது குற்றம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
படித்தொகையைப் பெற்றுக்கொண்டு வீட்டு வேலைக்கு உதவியாளர்களை நியமித்துக்கொள்ளலாம். ஆர்டர்கலிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; காவல்துறை ஆர்டர்லிகளை திரும்பப்பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரணியம் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் ‘ஆர்டர்லி’யாக பணியாற்றிய 210 காவலர்களை தமிழக காவல்துறை திரும்ப பெற்றுள்ளது. மேலும், 150 போலீசார் இன்னும் தங்கள் காவல் பணிக்கு திரும்ப வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் காவலர்களை வீட்டு வேலைகளுக்கு ஈடுபடுத்தும் ஆர்டர்லி நடைமுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22 அன்று கண்டனம் தெரிவித்தது.
சென்னை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில், 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்துக்கு கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அனைத்து எஸ்பி-சிஐடி போலீஸ்காரர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“