மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிலவி வரும் நிலையில் புதிய முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக உத்தவ் தாக்கரேவை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி ஏற்கவுள்ளார். இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு விலகினார். பின்னர் தாக்கரே தானே ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நள்ளிரவில் சமர்ப்பித்தார்.
புதிய அரசு அமையும் வரை அவரை முதல்வராக தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரவில் கவுகாத்தியில் இருந்து கோவாவை அடைந்தனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பனாஜியில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு வந்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்த கட்ட நடவடிக்கையை தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே எடுப்பார்கள் என்று சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார். இந்தநிலையில் அவர்கள் இருவரும் இன்று கூட்டாக ஆளுநர் கோஷியாரியை சந்தித்து பேசினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் எனவும், தான் அரசில் இருந்து விலகி, அது சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வேன் எனவும் அறிவித்தார். இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்பார் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ கடந்த இரண்டரை ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பல பிரச்னைகளை ஷிண்டே தலைமையிலான அரசு திறம்பட தீர்க்கும். மராத்தியர்கள், ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவு செய்வது ஆகியவை புதிய அரசின் முன்னுரிமைகளாக இருக்கும்.
பாலாசாகேப் தாக்கரே வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சிகளுடன் சிவசேனா சென்றது. உத்தவ் தாக்கரே அரசு ஊழலில் மூழ்கியதால், இரண்டு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறைக்குச் செல்ல வழிவகுத்தது’’ எனக் கூறினார்.